திரைப்படமாகிறது கோழிக்கோடு விமான விபத்து சம்பவம்: இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,August 21 2020]

பரபரப்பான ஒரு உண்மை சம்பவம் நடந்தால் அதனை உடனே திரையுலகினர் திரைப்படமாக எடுப்பது கடந்த பல வருடங்களாக வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்து சம்பவம் தற்போது திரைப்படமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் 190 பயணிகளுடன் வந்து இறங்கிய ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. அதில் பைலட் மற்றும் துணை பைலட் உள்பட 18 பேர் பலியானார்கள் என்பதும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த விமான விபத்தை மையமாக வைத்து ’கேலிகெட் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராக உள்ளது. மலையாளத்தில் உருவாகும் இந்தப் படத்தை மாயா என்பவர் இயக்க உள்ளார் மஞ்சித் மரஞ்சேரி என்பவர் கதை திரைக்கதை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் டேக் ஆப் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் குறித்த பஸ்ட் பஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது