குழந்தை பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- IndiaGlitz, [Friday,December 28 2018]
மரண தண்டனையை உலகின் பல நாடுகள் தவிர்த்து வரும் நிலையில் இந்தியாவில் இன்னும் கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடவடிக்கை அமலில் உள்ளது. இந்த நிலையில் மன்னிக்கவே முடியாத கொடூர குற்றங்களில் ஒன்றான குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு குழந்தைகளை பாலியல் கொடுமையில் இருந்து பாதுகாக்க போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனையும் குறைந்தபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் வகையில் இருந்தது. ஆனால் இந்த சட்டத்திற்கு பின்னரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையவில்லை என்பதால் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவையில் போக்சோ சட்டத்தின் 4,5,6,9,14,15, மற்றும் 42 வது பிரிவுகளை திருத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி இனிமேல் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டால் அந்த குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்கும். தண்டனை கடுமையானால் மட்டுமே குழந்தைகளுக்குக் எதிரான பாலியல் குற்றங்கள் குறையும் என்ற வகையில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.