சமூகவலைத்தள 'தோழர்' டிரெண்டுக்க்கு சைலேந்திரபாபு கொடுத்த விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,January 25 2017]
இதுவரை தோழர் என்ற வார்த்தையை கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் 'தோழர்' என்ற வார்த்தை வைரல் ஆகி வருகிறது. சமூக வலைத்தள பயனாளிகள் காலை வணக்கம் தோழரே, மாலை வணக்கம் தோழரே என்று தோழர் என்ற வார்த்தையை பரப்பி வருவதற்கு காரணம் என்ன தெரியுமா?
சமீபத்தில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தனது குழுவினர்களிடம் 'யாரேனும் தோழர் என்ற வார்த்தையுடன் கூடிய சமூக வலைத்தள குறுஞ்செய்தி அனுப்பினால் அதை படிக்கவே வேண்டாம், உடனே அழித்துவிடுங்கள் என்று கூறியதாகவும், இதன் காரணமாகவே சமூக வலைத்தள பயனாளிகள் வேண்டுமென்றே தோழர் என்கிற வார்த்தையை டிரெண்டாக மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சைலேந்திராபு தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். இது ஒரு பொய்யான செய்தி என்றும் தோழர் என்ற வார்த்தையில் தான் எந்த கருத்தும் கூறவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழ்வழி கல்வி பயின்ற தனக்கு அந்த வார்த்தையின் பொருள் தெரியும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்