ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். வெற்றிக்கனியை ருசிப்பது யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இரு அணிகளாக பிரிந்துள்ள சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் தங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது என்பதை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுகிறது.
தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் அதிருப்தியை கொண்டிருக்கும் சசிகலா அணிக்கு இந்த தேர்தல் ஒரு அக்னிப்பரிட்சை. குறிப்பாக இந்த தேர்தலில் டிடிவி தினகரன், சசிகலா அணியின் சார்பில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் அதிருப்தியை பெற்றுள்ள நிலையில் டிடிவி தினகரன் நிற்பது உறுதியானால் தேர்தல் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுவிடும். பெரியகுளம் பாராளுமன்ற தொகுதியில் தினகரன் போட்டியிட்டபோது பெய்த பணமழை ஆர்கேநகரிலும் தொடரலாம். அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த அமைச்சர் மற்றும் படைபரிவாரங்கள், காவல்துறை உள்பட பலர் தினகரனுக்கு ஆதரவாக களமிறங்க வாய்ப்பு உள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தை தக்க வைத்து கொள்ளூம் முயற்சியிலும் சசிகலா அணி தீவிரமாக இருப்பதால் வெற்றிக்கனியை பறித்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.
அதிமுக சசிகலா அணியில் இருந்து டிடிவி தினகரன் நிற்பது உறுதியானால் ஓபிஎஸ் அணிக்கு பாதி வெற்றி கிடைத்ததுபோலத்தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சசிகலா மீது அதிருப்தி ஏற்கனவே மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் சசிகலாவின் உறவினர் என்றால் அந்த அதிருப்தியை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவே மக்கள் கருதுவர். மேலும் ஓபிஎஸ் அணியில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி நட்ராஜை போல இவரையும் எம்.எல்.ஏ ஆக்க மக்கள் கண்டிப்பாக விரும்புவார்கள்.
இரண்டு அதிமுக அணிகளுக்கு இடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் களமிறங்குகிறார். இவர் மேற்கொண்டு அரசியல் பயணத்தை தொடரலாமா? வேண்டாமா? என்பதை இந்த தேர்தல் முடிவு தெரிவித்துவிடும். மணிப்பூர் இரோம் ஷர்மிளாவின் தியாகத்தை இவரோடு ஒப்பிட முடியாது என்றாலும் அவர் பெற்ற ஓட்டுக்களை இவர் பெற போகும் ஓட்டுக்களோடு ஒப்பிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக இரண்டாக பிரிந்தால் அதிகபட்ச பயன் திமுகவுக்கு தான் என்பதில் சந்தேகம் இல்லை. இது 1988 ஆம் ஆண்டு தேர்தலில் தெரிந்தது. ஆனால் அதிமுகவின் பிளவை எந்த அளவுக்கு செயல் தலைவர் சரியான வேட்பாளரை தேர்வு செய்து செயல்படுத்த போகிறார் என்பதில்தான் திமுகவின் வெற்றி உள்ளது.
மொத்தத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் வாக்காளர்கள் விழிப்புணர்வு பெற்றிருப்பதால் இரட்டை இலை சின்னமோ, பணமோ வெற்றியை தீர்மானிக்காது. மக்களின் நம்பிக்கையை பெற்ற வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும் என்பதே அனைவரின் கணிப்பாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments