ஜனார்த்தன் ரெட்டியின் ஆடம்பர திருமணமும் மனோஜ் முன்னாட்டின் அர்த்தமுள்ள திருமணமும்
- IndiaGlitz, [Saturday,December 17 2016]
சமீபத்தில் இந்திய ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளிவந்த கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியின் மகள் திருமணம் குறித்து அனைவரும் அறிவோம். சுமார் ரூ.500 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த ஆடம்பர திருமணத்தில் அலங்கார தோரணைகள், அரண்மனை போன்ற முகப்பு, சுமார் 100 வகையான உணவு விருந்து என அமர்க்களப்படுத்தப்பட்டது. இந்த திருமணம் குறித்த சர்ச்சையும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதற்கு நேர்மாறாக மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் முன்னாட் தனது மகளின் திருமணத்தை நடத்தியுள்ளார். இந்த திருமணமும் காஸ்ட்லியான திருமணம்தான். ஆனால் இந்த திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு வீடு இல்லாத ஏழை எளியவர்கள் 90 பேர்களுக்கு வீடுகள் கட்டி தனது மகள் ஸ்ரேயாவின் திருமண பரிசாக கொடுத்துள்ளார் இந்த தொழிலதிபர். இதற்காக அவர் செலவு செய்த தொகை சுமார் ரூ.70 முதல் ரூ.80 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.500 கோடியில் நடத்திய ஆடம்பர திருமணத்திற்கு வந்தவர்கள் அதன் பிரமாண்டத்தை பார்த்துவிட்டு பின்னர் மறந்துவிடுவார்கள். ஆனால் 90 வீடுகளை பரிசாக பெற்ற அந்த ஏழை எளிய உள்ளங்கள் தங்கள் ஆயுள் உள்ளவரையிலும், மணமகள் ஸ்ரேயாவுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டே இருப்பார்கள். இதே போன்று மற்ற தொழிலதிபர்களும் தங்கள் வீட்டு திருமணத்தை அர்த்தமுள்ள திருமணமாக நடத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.