இனி வருடத்திற்கு ஒருமுறை பஸ் கட்டணம் உயரும்: அமைச்சரின் அதிர்ச்சி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 20 2018]

தமிழகத்தில் இன்றுமுதல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமே பேருந்தில் செல்கின்றனர் என்பதால் அவர்களுக்கு இந்த கட்டண உயர்வு கடுமையான பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்பது உறுதி. அதிலும் சுமார் 50% கட்டண உயர்வு என்பது சாதாரண விஷயம் இல்லை

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும், அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக இயங்கிடவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஏழு வருடங்களுக்கு பின்னர் கட்டணம் உயர்வதால் பொதுமக்கள் இதனை கடுமையான சுமையாக கருதுகின்றனர் என்றும் இனிமேல் அவ்வபோது ஏற்படும்  நிர்வாக செலவுகளுக்கு ஏற்ப, சம்பளம், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப வருடந்தோறும் பஸ் கட்டணத்தை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று உயர்த்திய பேருந்து கட்டண உயர்வுக்கே பொதுமக்கள் மயக்கம் போட்டு விழாத குறையாக புலம்பி வரும் நிலையில் வருடந்தோறும் இனி பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.