லாட்டரியில் கிடைத்த பணத்தில் வாங்கிய நிலத்தில் புதையல்: கொட்டும் அதிர்ஷ்டம்
- IndiaGlitz, [Friday,December 06 2019]
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் லாட்டரியில் ரூபாய் 6 கோடி பரிசு கிடைத்தது. அந்த பணத்தில் அவர் ஒரு நிலத்தை வாங்கி விவசாயம் செய்த போது அதில் புதையல் கிடைத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லாட்டரி, புதையல் என அடுத்தடுத்து அதிர்ஷ்டங்கள் அவரை கொட்டிக் கொண்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கிளாமானூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரத்னாகரன் பிள்ளை. இவருக்கு கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் லாட்டரி பம்பரில் ரூபாய் 6 கோடி பரிசு கிடைத்தது. இதனை அடுத்து அவர் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளுக்கு ஆளானார். இந்த நிலையில் அவர் தனக்கு கிடைத்த பரிசு பணத்தின் ஒரு பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்ய முடிவெடுத்தார். பயிர் செய்வதற்காக அவர் குழி தோண்டியபோது மண்பானை ஒன்று கிடைத்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் 100 ஆண்டுக்கும் பழமையான நாணயங்கள் இருந்தன
உடனடியாக அவர் இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். காவல் நிலைய அதிகாரிகளும் தொல்பொருள் துறை அதிகாரிகளும் விரைந்து வந்து அந்த இடத்தை தோண்டியபோது 2595 பண்டைய நாணயங்கள் இருந்துள்ளதை கண்டுபிடித்தனர். இதில் வெள்ளி மற்றும் செப்பு நாணயங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
திருவாங்கூர் மகாராஜா காலத்தில் செய்யப்பட்ட இந்த நாணயங்கள் பெரும் மதிப்புடையதாக கருதப்படுகிறது. இதுகுறித்து புதையல் கிடைத்த ரத்னாகரன் பிள்ளை கூறியபோது ’நான் தான் முதலில் ஒரு பானையை வெளியே எடுத்து பார்த்தேன். அதில் ஏராளமான செப்பு நாணயங்கள் இருந்தன. இதனை அடுத்து அந்த நாணயங்கள் திருவிதாங்கூர் மன்னரின் காலத்தவை என்பதை கண்டுபிடித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தேன். தற்போது இந்த செப்பு நாணயங்கள் அரசாங்கத்திடம் பாதுகாப்பாக உள்ளது
இந்த புதையலின் மதிப்பில் எனக்கும் ஒரு பகுதி கிடைக்கும் என்றாலும் அதை நான் பெரிதாக நினைக்கவில்லை. என்னுடைய நிலத்தில் புதையல் கிடைத்ததையே நான் பெரிதாக நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார்