இந்தியாவின் 2020 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Send us your feedback to audioarticles@vaarta.com
2008 – 2009 ஆம் நிதியாண்டிற்குப் பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான மந்த நிலையைச் சந்தித்து வருவதாக பொருளாதார அறிஞர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த வருட மத்திய பட்ஜெட் மக்களுக்குச் சென்றடைய வேண்டிய விநியோகம், கிடைக்க வேண்டிய கடன் வசதிகளை அதிகப்படுத்தும் விதத்தில் பட்ஜெட் வடிவமைக்கப் பட்டிருந்தது.
“உண்மையில் இந்திய பொருளாதாரத்தின் நிலைமை கடந்த 9 காலாண்டுகளாகக் கடுமையான சிக்கலைக் கொண்டிருக்கிறது. இதனைச் சரிசெய்ய எந்தவிதமான திட்டங்களும் மத்திய அரசிடம் இல்லை” என்று எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச் சாட்டுகளைத் தொடர்ந்து வீசி வருகின்றன. இதற்கு பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம் போன்றவையே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2020 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதா ராமன் அவர்கள் இன்று காலை 11 மணி அளவில் தாக்கல் செய்ய இருக்கிறார்.
பொருளாதார மந்த நிலை இருக்கிறதா – இல்லையா?
பொருளாதார மந்த நிலைக்கு சீனா- அமெரிக்கா இடையே நடந்துவரும் வர்த்தகப் போராட்டம் ஒரு காரணம் எனவும் நிதி அமைச்சகம் தெரிவித்து இருந்தது. உண்மையில் சீனா – அமெரிக்கா இடையே நடைபெறும் வர்த்தகப் போராட்டத்தினால் உலக நாடுகள் பலவற்றில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது ஒரு முக்கியமான காரணமாக இருந்தாலும் மக்களிடம் பொருட்களை வாங்கும் சக்தி குறைந்து விட்டது என்பதையே இந்திய பொருளாதாரத்தின் கடும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 2020 ஆண்டில் தாக்கல் செய்யப் படுகின்ற மத்திய பட்ஜெட் எதைக் குறித்து கவனம் செலுத்தும்? தொழில் துறை, விவசாயம், பெட்ரோலியப் பொருட்களின் விலை போன்றவற்றில் எந்த வகையான முன்னேற்றங்களை எதிர்ப்பார்க்கலாம்? என்பன குறித்த எதிர் பார்ப்புகள் நிலவுகின்றன.
மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜிடிபி விகிதம் 5 காலாண்டுகளாக வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஏற்றுமதி செய்யப் படுகின்ற பொருட்களின் விகிதமும் குறைந்து விட்டது. ஆனால் இறக்குமதியின் அளவு மட்டும் குறையவே இல்லை என்று பொருளதார நிபுணர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதோடு பணவிக்கத்தின் அளவும் அதிகரித்து விட்டதன் காரணமாக மக்களிடன் பொருட்களை வாங்குகின்ற சக்தி குறைந்து காணப்படுகிறது. கடந்த ஆண்டில் வெங்காயம் முதற்கொண்டு காய்கறிகளின் விலையும் ஏற்றத்தை சந்தித்ததால் நாட்டில் மிகப் பெரிய சர்ச்சை நிலவியது என்பதும் குறிப்பிடத் தக்கது.
முன்னதாக உள்கட்டமைப்பு வசதிகளுக்கு என்று 105 லட்சம் கோடி முதலீட்டினை அறிவித்திருந்தார் நிதியமைச்சர். இந்த அறிவிப்பு இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் சந்தையாக மாற்ற உதவும் எனவும் நம்ப படுகிறது. தற்போது மத்திய அரசு கட்டமைப்பு வசதிகளின் பெருக்கத்தை பெரிதும் ஊக்கப் படுத்தி வருகிறது என்பதும் இந்தியாவின் வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்ல ஒரு காரணமாக அமையும் என்று ஒரு பக்கத்தில் எதிர்ப்பார்பு காணப்படுகிறது.
வங்கித் துறை வலுப்படுத்துவதற்காக பல்வேறு வங்கிககள் ஒன்றாக இணைக்கப் படும் முயற்சியில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. வங்கிகள் ஒன்றாக இணையும் போது அதிக அளவில் முதலீடுகள் பெருகும் என்றும் மக்களுக்குத் தேவையான கூடுதல் கடனை கொடுக்க வங்கிகளால் முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனை அடுத்து இந்த பட்ஜெட் வங்கிகளின் சேர்க்கை குறித்து விளக்கும் எனவும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. முக்கியமாக 2020 காலாண்டிற்கான மத்திய பட்ஜெட் முதலீடுகளின் புள்ளிவிவரங்கள் அதிகரிப்பதனை மையப் படுத்தி இருக்கலாம் என்று எதிர்ப் பார்க்கப் படுகிறது.
ஒரு நாட்டில் வலுவான பொருளாதாரம் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?
ஒரு நாட்டில் பணக்காரர் முதல் கடை கோடியில் இருக்கும் பாமரன் வரை அவர்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்குவதற்கு சக்தி இருக்கிறது என்றால் அந்த நாட்டில் பொருளாதாரம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம். உண்மையில் இந்தியாவில் வாங்கும் சக்தி மிகவும் குறைந்து விட்டதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பொருட்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டது என்பதை, இந்தியாவில் பல பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது கம்பெனிகளை மூடி விட்டு சென்றுவிட்டதில் இருந்தே உணர்ந்து கொள்ள முடியும்.
பட்ஜெட் என்பது ஒரு நாட்டில் உள்நாட்டு உற்பத்தி, மக்களின் வாங்கும் சக்தி, ஏற்றுமதி பொருட்களின் அளவு, இந்தியாவில் மேற்கொள்ளப் படவிருக்கிற முதலீடுகளின் அளவு, சிறு குறு தொழில்களின் உற்பத்தி அளவு, விவசாயப் பொருட்களின் உற்பத்தி, தொழில் நுட்பம் போன்ற அனைத்து கூறுகளின் வளர்ச்சி நிலையைப் பொறுத்தே அமைகிறது. 2020 மத்திய பட்ஜெட் இந்தியப் பொருளாதாரத்தை ஒரு படி மேலே கொண்டு செல்வதற்கான வழிவகைகளைக் கொண்டிருக்குமா என்ற கேள்விக்கு இன்னும் சிறிது நேரத்தில் விடை கிடைத்துவிடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments