Download App

Bruce Lee Review

வளர்ந்து வரும் முன்னணி கதநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார், அறிமுக இயக்குனர் பிரஷாந்த் பாண்டிராஜ் உடன் இணைந்திருக்கும் படம் ‘புரூஸ் லீ’ நீண்ட நாள் படப்பிடிப்பில் இருந்துவிட்டு வெளியாகியிருக்கிறது. அவல நகைச்சுவை (Dark Comedy) படம் என்று விளமபரப்படுத்தப்பட்டுள்ள ‘புரூஸ் லீ’ எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் காண்போம்.

ஜெமினி கணேசன் என்கிற புரூஸ் லீ (ஜி.வி.பிரகாஷ்) ஒரு பயந்தாங்கொள்ளி. அவனது நண்பன் அப்பாஸ் (பாலா சரவணன்) உடன் வசிக்கிறான்.  புரூஸ் லீயின் காதலி (க்ரிதி கர்பந்தா) மற்றும் அப்பாஸின் காதலி  என இருவரும் சேர்ந்துகொள்ள நால்வரும் ஒன்றாக சுற்றுகிறார்கள். ஒரு முறை  மெரினா பீச்சில் அவர்களுக்கு ஒரு கேமரா கிடைக்கிறது. அதை வைத்து ஒரு தாதா (ராம்தாஸ்) ஒரு லோக்கள் அமைச்சரைக் (மன்சூர் அலிகான்) கொல்வதை படம்பிடித்துவிடுகிறான் புரூஸ் லீ.

நால்வரும் சேர்ந்து அந்தப் படத்தை போலீஸ் கமிஷனருக்கு அனுப்புகிறார்கள், ஆனால் பயணில்லை. கொலையை அம்பலப்படுத்த அவர்கள் செய்யும் வேறு சில முயற்சிகளும் தோற்றுவிடுகின்றன. இந்நிலையில் தாதாவின் ஆட்கள் இரண்டு பெண்களையும் கடத்திவிடுகின்றனர்.

அந்தப் பெண்களுக்கு என்ன ஆனது? புரூஸ் லியும் அப்பாஸும் தங்கள காதலிகளைக் காப்பாற்றினார்களா அல்லது அவர்களும் மாட்டிக்கொண்டார்களா? இறுதியில் நால்வருக்கும் என்ன ஆகிறது என்பதுதான் மீதிக் கதை.

டார்க் காமடி படம் என்று கூறிவிட்டதால், இயக்குனர் அதில் மட்டுமே கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அதனால் ஆங்காங்கே டார்க் தன்மை கொண்ட நகைச்சுவைக் காட்சிகள் சிரிப்பூட்டுகின்றன. கதை, திரைக்கதை போன்ற விஷயங்களுக்கு துளியும் மெனக்கெட்டிருப்பதாகத் தெரியவில்லை. கதையில் நிகழும் அனைத்தும் தற்செயல் நிகழ்வுகளாகவும் திரைக்கதை ஆசிரியரின் வசதிக்கேற்ற திருப்பங்களாகவும் எப்படி இதெல்லாம் நடக்கும் என்று யோசிக்க வைக்கும் அபத்தங்களாகவும் இருக்கின்றன.

திரையில் நடக்கும் எந்த ஒரு விஷயமும் பார்வையாளர்களை பாதிக்கவில்லை. அடுத்து இப்படி நடக்கும் என்று யூகித்தால், ஒன்று அப்படியே நடக்கிறது அல்லது அதைவிட அபத்தமாக ஏதாவது நடக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்கள். இவ்வளவு ஏனோ தானோவென்று எழுதப்பட்ட திரைக்கதைக்கு ஜி.வி.பிரகாஷ் போன்ற நட்சத்திர அந்தஸ்தை நோக்கி முன்னறிக் கொண்டிருக்கும் நடிகர் எதற்கு என்று தெரியவில்லை.

இதையெல்லாம் மீறி படத்தை ஓரளவு பார்க்கவைப்பது பாலா சரவணன் மற்றும் மொட்டை ராஜேந்திரனின் நகைச்சுவைதான். நாயகனையே கலாய்க்கும் நண்பனாக பாலா சரவணன் அதகளம் செய்திருக்கிறார். நகைச்சுவை வசனங்களுக்கு அவர் தரும் எக்ஸ்பிரஷன்கள் இயல்பாகவும் ரசிக்கும்படியும் உள்ளன. மொட்டை ராஜேந்திரன் இரண்டாம் பாதியில் சில இடங்களில் நன்கு சிரிக்க வைக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் ‘கில்லி’ விஜய் போலவும் ‘வரலாறு’ அஜித் போலவும் செய்துகாட்டும் காட்சியில் தியேட்டரில் விசில்களும் கைதட்டல்களும் காதைக் கிழிக்கின்றன.

நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், இமேஜ் பற்றி எல்லாம் கவலையேபடாமல் கதைக்கும் வேடத்துக்கும் என்ன தேவையோ அதை சரியாகக் கொடுத்திருக்கிறார். நாயகியிடமும் நண்பனிடமும், மொக்கை வாங்குகிறார். வில்லன்களிடம் அடி வாங்குகிறார். ஒரு வளர்ந்து வரும் நாயக நடிகரை இதுபோல் பார்ப்பது அரிது. இதற்காகவே அவரைப் பாராட்டலாம் என்றாலும், அன்னார் கதைத் தேர்வில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோள்.

கீர்த்தி கர்பந்தா துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார். நடிப்பு பரவாயில்லை. கொஞ்சம் கிளாமரும் காட்டுகிறார். உதட்டசைவும் வசனங்களூம் பொருந்தவேயில்லை.

ராமதாஸின் (முனிஷ் காந்த்) பலமே அவர் வசனங்களைப் பேசும் விதம்தான். ஆனால் அவருக்கு முதல் பாதியில் கிட்டத்தட்ட வசனங்களே இல்லை. ’காட்ஃபாதர்’ உள்ளிட்ட ஹாலிவுட் படக் கதாபாத்திரங்களை வைத்து காமடி செய்யும் முயற்சி பெரிதாக எடுபடவில்லை. இரண்டாம் பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் கலகலப்பூட்டுகிறார்.

கெளரவத் தோற்றங்களில் வந்துபோகும் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் இருவரும் இவர்களுக்கு மேலும் சில காட்சிகள் வைத்திருக்கலாமே என்று நினைக்க வைக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ’நான்தான் உங்கொப்பன் டா’  பாடலும் தீம் இசையும் ரசிக்கும்படி உள்ளன. மற்ற பாடல்கள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையானதைத் தந்திருக்கிறது.

பிரதீப்.இ.ராகவ், ஜி.மனோஜ் கியான் ஆகியோரின் படத்தொகுப்பில் ரசிகர்களுக்கு நன்கு புரிந்துவிட்ட விஷயங்களை மீண்டும் மீண்டும் காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.

சுருக்கமாக சொல்வதென்றால் ’புரூஸ் லீ’ படத்தில் நமக்குக் கிடைப்பது கொஞ்சம் நகைச்சுவை நிறைய ஏமாற்றம்.

Rating : 1.5 / 5.0