5,000 கோடி ஜீவனாம்சம்… வரலாறு காணாத தொகையை வாங்கும் பெண் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,December 22 2021]

துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை விட்டு அவருடைய 6 ஆவது மனைவி ஹயா பினட் பிரிந்துள்ளார். மேலும் பாதுகாப்பு கேட்டு லண்டன் நீதிமன்றத்தை அவர் நாடிய நிலையில் 5,525 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அந்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனிதர்கள் தங்களின் மண வாழ்க்கை கசக்கிறபோது விவகாரத்துப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் இதையே பிரபலங்கள் செய்தால் நிலைமையே தலைகீழாக மாறுகிறது. அமேசான் நிறுவனர் ஜெர்ஃப் பெசோஸ் தனது மனைவியை விவகாரத்து செய்தபோது தன்னுடைய சொத்தில் கால் வாசியை இழந்தார்.

அதேபோல சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸும் மெலிண்டா பில்கேட்ஸும் தங்களது மண வாழ்க்கையை முறித்துக் கொண்டனர். ஆனால் மெலிண்டா அறக்கட்டளை தொடர்ந்து இயங்கும் என்பதால் இவர்களுடைய மணமுறிவில் பெரிய அளவிற்கு மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் துபாய் அரசர் ஷேக் முகமது ரஷீத் விஷயத்தில் பெரிய தொகையை ஜீவனாம்சமாக வழங்கும்படி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. .

துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷீத் தனது உறவினர் பெண்ணான ஹயா பினட்டை கடந்த 2004 ஆம் ஆண்டு 6 ஆவதாகத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹயா தனது குழந்தைகளுடன் தலைமறைவாகிவிட்டார்.

இதைத்தொடர்ந்து லண்டன் நீதிமன்றத்தை நாடிய அவர் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் தனக்கு பாதுகாப்பு வேண்டும், சுதந்திரமாக வாழ விரும்புகிறேன் என்றும் கோரிக்க வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம் மணமுறிவு குறித்த முடிவிற்கு ஆதரவு அளித்து இந்த மணமுறிவினால் ஹயாவிற்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சரிக்கட்ட 550 மில்லியன் யூரோ ஜீவனாம்சம் வழங்கும்படி உத்தரவிட்டு உள்ளது. 550 மில்லியன் யூரோ என்பது இந்திய மதிப்பில் ரூ.5,525 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் பலரும் தங்களது விவகாரத்திற்காக லண்டன் நீதிமன்றத்தை நாடிவரும் நிலையில் தற்போது வரலாற்றில் முதல் முறையாக லண்டன் நீதிமன்றம் இவ்வளவு பெரிய தொகை ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் குழந்தைகளைப் பராமரிக்க ஆண்டுதோறும் 11.2 மில்லியன் பவுண்டு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.