பிரிட்டன் இளவரசரை அடுத்து பிரதமருக்கும் கொரோனா!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், ஏழை பணக்காரர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என எந்தவித பேதமும் இன்றி சாதாரண குடிமகன் முதல் விவிஐபி வரை அனைவரையும் தாக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது அடுத்த அதிர்ச்சியாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரிட்டன் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் தற்போது நாட்டின் பிரதமருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டரில் கூறும்போது ’கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு இலேசான கொரோனா பாதிப்பு அறிகுறி தெரிந்தது. இதனை அடுத்து நான் பரிசோதனை செய்தபோது பாசிடிவ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். இருப்பினும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அரசு வேலையை நான் கொண்டிருக்கின்றேன்’ என்று வீடியோ ஒன்றில் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.