பிரிட்டன் பிரதமரின் உடல்நிலை மோசம்: ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு
- IndiaGlitz, [Tuesday,April 07 2020]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் கடந்த மாதம் 26ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய வீட்டில் தனக்குத் தானே தனிமைப் படுத்திக் கொண்டார். இருப்பினும் அவர் வீட்டிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டு ஆட்சியை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து இலண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு மூச்சு விடுவதில் மேலும் சிரமம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தவில்லை என பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
லண்டன் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதமர் போரீஸ் ஜான்சன் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளதால் பிரிட்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் அமைச்சரவை பொறுப்புகள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
55 வயதான போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது கர்ப்பமான காதலியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது