எட்டே வாரத்தில் பேசிய குழந்தை: ஆனந்தக்கண்ணீர் விட்ட பெற்றோர்
- IndiaGlitz, [Thursday,August 27 2020]
பொதுவாக குழந்தைகள் 10 முதல் 14 மாதங்கள் கழித்தே முதல் வார்த்தையை பேசும் என்ற நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த குழந்தை ஒன்று பிறந்து இரண்டே மாதத்தில் ’ஹலோ’ என்ற வார்த்தையை பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த 37 வயது கரோலின் மற்றும் 36 வயதில் நிக் தம்பதிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு வயது குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிறந்து இரண்டு மாதமே ஆன தனது குழந்தையை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு குழந்தையின் தந்தை குழந்தையை பேச வைக்க முயற்சி செய்தார். அவரது முயற்சிக்கு ஆச்சரியமாக பலன் கிடைத்தது. குழந்தையின் தந்தை ‘ஹலோ’ என்று கூறியவுடன் அந்த குழந்தை திக்கித் திணறி பதிலுக்கு ‘ஹலோ’ என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆச்சரியமடைந்த குழந்தையின் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.
உலகிலேயே இரண்டே மாதத்தில் பேசிய குழந்தை இதுவாகத்தான் இருக்கும் என்று பலர் இந்த வீடியோ குறித்து கருத்து கூறி வருகின்றனர். மேலும் உலக சாதனைக்காக இந்த வீடியோவை காண்பித்து விண்ணப்பிக்க உள்ளதாகவும் இந்த குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இரண்டே மாதத்தில் பேச ஆரம்பித்த இந்த குழந்தை பிற்காலத்தில் புத்திசாலித்தனமாக வளரும் என்று தாங்கள் நினைத்து பெருமைப்படுவதாக இந்த குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.