Download App

Brindavanam Review

இயக்குனர் ராதாமோகன் படங்களில் நகைச்சுவையும் எமோஷனல் காட்சிகளும் நிறைந்திருக்கும். துளிக்கூட ஆபாசமோ வன்முறையோ இருக்காது. ரசிகர்கள் பல இடங்களில் சிரித்து சில இடங்களி கண்ணீர் சிந்தி திரையைவிட்டு வெளியேறுவார்கள். இவை அனைத்தும் உள்ள படமாக வந்திருக்கிறது ‘பிருந்தாவனம்’.

ஊட்டியில் முடிதிருத்தும் தொழிலாளி கண்ணன் (அருள்நிதி), பேச்சு மற்றும் செவித் திறனற்றவன். நடிகர் விவேக்கின் தீவிர ரசிகன். தான் வசிக்கும் பகுதியில் அனைவருக்கும் சின்னச் சின்ன உதவி செய்து அனைவரின் அன்புக்குப் பாத்திரமானவனாக இருக்கிறான்.

திடீரென்றுஒரு நாள் ஊட்டிக்கு வந்து தங்கியிருக்கும் நடிகர் விவேக்கை  (விவேக்) சந்திக்கிறான் கண்ணன்.  அவருக்கு ஒரு சின்ன உதவி செய்கிறான். விவேக்குக்கு அவனை மிகவும் பிடித்துப் போகவே இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகின்றனர். கண்ணனின் நண்பன் வர்க்கி (செந்தில்) மற்றும் தோழி சந்தியா (தான்யா) ஆகியோரும் விவேக்குக்கு நெருக்கமாகிறார்கள். நால்வரும் நண்பர்களாக வலம்வருகிறார்கள்.

சந்தியாவுக்குக் கண்ணன் மீது காதல். விவேக்கின் உந்துதலால் தன் காதலைக் கண்ணனிடம் தெரிவிக்கிறாள். ஆனால் கண்ணன் சந்தியாவின் காதலைக் கோபத்துடன் நிராகரிக்கிறான். அவளுக்குப் பரிந்துபேசும் விவேக்கையும் அவமதிக்கிறான்.

கண்ணன் இப்படி நடந்துகொள்வதற்கான காரணம் என்ன?சந்தியாவின் காதல் என்ன ஆனது? அதில் விவேக்கின் பங்கு என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை திரையில் காண்க.

ராதாமோகன் படத்தில் விரவிக் கிடக்கும் ஃபீல்குட் தன்மை இந்தப் படத்திலும் நிரம்பியிருக்கிறது. இந்த வெய்யில் காலத்துக்கு ஊட்டியின் பனிசூழ் பிரதேசங்களில் படமாக்கியிருப்பது கண்ணுக்கும் மனதுக்கும் இனிமையான விருந்தாக அமைகிறது.

முதல் பாதியில் கதாபாத்திரங்களின் அறிமுகத்துக்கு கொஞ்சம் அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. விவேக் திரையில் வந்த நிமிடத்திலிருந்து திரைக்கதை களைகட்டத் தொடங்குகிறது. விவேக் வரும் முதல் காட்சியிலேயே நகைச்சுவைக் சரவெடிகளைக் கொளுத்திப் போட்டு தன் வலிமையான மறுவருகையைப் பதிவுசெய்கிறார். அங்கிருந்து இடைவேளை வரையிலும் இரண்டாம் பாதியில் பெருமளவிலும் வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை, மனதைத் தொடும் எமோஷனல் காட்சிகள், கைதட்டி ரசிக்க வைக்கும் பொன் பார்த்திபனின் வசனங்கள் ஆகியவற்றுடன் கலகலப்பாக நகர்கிறது படம்.

இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்துக்கு மேல் தொய்வடையத் தொடங்குகிறது. இரண்டாம் பாதியில் வரும் ஒரு திருப்புமுனை சற்று அதிர்ச்சிதருவதாக இருக்கிறது. ஆனால் அதைத் தொடர்ந்து வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்குப் பின் நடப்பவை பெரும்பாலும் தேவையில்லாமல் படத்தை நீட்டிக்கும் உத்தியாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் இந்தக் காட்சித் தொடரிலும் சில ரசிக்கத்தக்க காட்சிகளும் வசனங்களும் உண்டு.

இரண்டாம் பாதியின்  குறைகளை,  படம் தரும் ஒட்டுமொத்த திருப்திக்காக நிச்சயமாகப் பொருத்துக்கொள்ளலாம்.

விவேக் படத்தைத் தாங்கி நிற்கிறார். அவர் இத்தனை ஆண்டுகளில் என்னென்ன வகையான நகைச்சுவைகளைச் செய்து நம்மை சிரிக்க வைத்திருக்கிறாரோ அவை அனைத்தையும் இந்தப் படத்தில் செய்து சிரிக்க வைப்பதிலும் வெற்றிபெறுகிறார்.  அதேபோல் எமோஷனல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து தன்னை ஒரு முழுமையான நடிகர் என்று நிரூபிக்கிறார்.

அருள்நிதிக்குக் கிடைத்த மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று. நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் கண்ணீர் சிந்தி அழும் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டும்.
.
தான்யா அழகாக இருப்பதோடு சிறப்பாக் நடிக்கவும் செய்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவருக்கு கோலிவுட்டிலிருந்து மேலும் பல வாய்ப்புகள் கதவைத் தட்டலாம்.

எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் உள்ளிட்ட மூத கலைஞர்கள் தங்கள் பங்கை வழக்கம்போல் சிறப்பாக செய்திருக்கின்றனர். செல் முருகன் மற்றும் செந்தில் காமடிக் காட்சிகளுக்கு சிறப்பாக உதவியிருக்கின்றனர்.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை காட்சிகளுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. பாடல்கள் எந்த தக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எம்.எஸ்.விவேகானந்தனின் ஒளிப்பதிவு ஊட்டியின் குளிர்ச்சியை உணரச் செய்கிறது. டி.எஸ்.ஜெய்யின் படத்தொகுப்பு சிறப்பாக உள்ளது.

மொத்தத்தில் மனதார சிரிக்க வைத்து ரசித்துக் கைதட்ட வைத்து  உருகிக் கண்ணீர் சிந்த வைத்து மற்றுமொரு மறக்க முடியாத ராதாமோகன்  படமாக வந்திருக்கிறது ‘பிருந்தாவனம்’.



Rating : 3.0 / 5.0