ராதாமோகன்-அருள்நிதியின் 'பிருந்தாவனம்': திரை முன்னோட்டம்

  • IndiaGlitz, [Sunday,May 21 2017]

'மொழி', 'அபியும் நானும்', 'கெளரவம்', 'உப்புக்கருவாடு' போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகனின் அடுத்த படைப்பு 'பிருந்தாவனம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் வெள்ளி அன்று வெள்ளித்திரைக்கு வருகிறது. ராதாமோகனின் முந்தைய படங்கள் போலவே இந்த படத்திலும் ஒரு ஆழமான சமூக கருத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்.

மிகப்பெரிய அரசியல் பின்புலம் இருந்தும் அந்த பின்புலத்தை நம்பி இருக்காமல் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றி படங்களை கொடுத்து வரும் அருள்நிதிதான் இந்த படத்தின் நாயகன். அதேபோல் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலும் தன்னுடைய தனி முத்திரை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். 'பலே வெள்ளைத்தேவா' படத்தில் அறிமுகமான தான்யாவுக்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

ராதாமோகனின் முந்தைய படங்களை போலவே இந்த படத்தின் டைட்டிலும் ஒரு கவிதை போன்று உள்ளது. இதுகுறித்து இயக்குனர் ராதாமோகன் கூறியபோது, ''பிருந்தாவனம்' என்றாலே அங்கு ஒரு சந்தோஷம் இருக்கும். குதூகலம் காணப்படும். அதுபோன்ற கதை என்பதால் இதற்கு 'பிருந்தாவனம்' என்று பெயர் வைத்திருக்கிறோம். மேலும் இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க ஊட்டியில் நடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் ரம்மியமான காட்சிகள் அதிகம் உள்ளது' என்று அவர் தெரிவித்துள்ளார்.

அருள்மொழி இந்த படத்தில் வாய்பேச முடியாத, காது கேட்காத ஒரு மாற்றுத்திறனாளியாக, முடிதிருத்தும் தொழிலாளி கேரக்டரில் கேரக்டரில் நடித்துள்ளார். இதற்காக அவர் ஒருமாதம் முடிதிருத்தும் தொழிலை பயிற்சி பெற்றுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். விவேக் இந்த படத்தில் அவரது ஒரிஜினல் கேரக்டராக அதாவது நடிகராகவும், அவரது ரசிகராகவும் நண்பராகவும் அருள்நிதி நடித்துள்ளார். ஒரு நடிகருக்கும், ரசிகனுக்கும் இடையேயான ஆழமான நட்பும், அழகான அன்பும்தான் 'பிருந்தாவனம்' படத்தின் கதை. ஷாருக்கானின் 'ஃபேன்' டைப்பில் இந்த படம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சித்தார்த் நடித்த 'ஜில் ஜங் ஜக், அருண்விஜய்யின் 'குற்றம் 23' உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளராக இருந்த எம்.எஸ்.விவேகானந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு டி.எஸ்.ஜேய் படத்தொகுப்பு செய்துள்ளார். வாசன் மூவீஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இயக்குனர் ராதாமோகனின் மற்ற படங்கள் போலவே இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். எனவே இந்த படம் குடும்பத்துடன் காணும் வகையில் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 130 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் பத்து நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராதாமோகன், அருள்நிதி முதன்முறையாக இணைந்துள்ள இந்த படம் எந்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை வரும் வெள்ளி அன்று திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.