மகன் தாலி கட்டிய சில நிமிடங்களில் தந்தை மரணம்: கொரோனா தந்த அதிர்ச்சி

  • IndiaGlitz, [Tuesday,May 26 2020]

நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் தாலி கட்டிய அடுத்த சில நிமிடங்களில் அவருடைய தந்தை திடீரென மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மணலி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த திருமணம் நாகர்கோயிலில் மிக நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்தது.

இந்த நிலையில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டிய சில நிமிடங்களில் திடீரென மணமகனின் தந்தை மயங்கி விழுந்தார். இதனையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதோடு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் முடிவெடுத்தனர்.

இந்தப் பரிசோதனையின் முடிவில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து மணமகனின் தந்தை உடன் நெருக்கமாக இருந்தவர்கள், அவருடைய உடலை வீட்டிற்கு எடுத்து வந்தவர்கள், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் என அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் நான் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், திருமணத்திற்கு வந்திருந்த 50 பேர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாலி கட்டிய சில நிமிடங்களில் தந்தை மரணமடைந்ததும் அதுவும் அவர் கொரோனாவால் மரணமடைந்ததாக வெளிவந்த செய்தியும் மணமகனுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.