சேலை கட்டிவந்த மாப்பிள்ளை, வேட்டி உடுத்திய பெண்ணுடன் செய்யும் வினோதத் திருமணம்!
- IndiaGlitz, [Wednesday,June 30 2021]
ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்து வரும் கும்மா எனும் குடும்பப் பெயரைக் கொண்டுள்ளவர்கள் திருமணத்தின்போது சில விசித்திர நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
பொதுவா திருமணத்தின்போது மணப்பெண் சேலை அணிந்து அலங்காரம் செய்து கொள்வார். ஆனால் இந்த குடும்பத்தில் மட்டும் மாப்பிள்ளை சேலை அணிந்து தன்னை ஒரு பெண்போல அலங்கரித்து கொள்வாராம். அவர் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் கும்மா வீட்டு திருமணத்தில் ஒரு மாப்பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டுமாம். கூடவே மணப்பெண் வேட்டி உடுத்தி மிடுக்கான தோற்றத்தில் இருப்பாராம்.
இப்படி இருவரும் மாறி மாறி வேடம் போட்டுக்கொண்டு தங்களது குலத் தெய்வத்தை வணங்கி வழிபட்ட பின்பு மாப்பிள்ளை, மணப்பெண்ணுக்கு தாலி கட்டுவாராம். காலம் காலமாக பின்பற்றி வருவதாகக் கூறப்படும் இந்த வழக்கத்தை மீறி அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லையாம்.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள செல்லோபள்ளி, மர்காபுரம், தரிமடுகு, அர்த்தவீடு, கம்பம், போன்ற ஊர்களில் இந்த குல வழக்கத்தை பின்பற்றித்தான் தற்போதுவரை திருமணம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. நாகரிகம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் இதுபோன்ற திருமணங்கள் நமக்கு விசித்திரமாகவே தோன்றுகிறது.