ஒரே இரவில் கோடீஸ்வரரான செங்கல் வியாபாரி… தேடிவந்த அதிர்ஷ்டம்!

  • IndiaGlitz, [Friday,February 25 2022]

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குறைந்த அளவில் செங்கல் வியாபாரம் செய்துவந்த வியாபாரி ஒருவருக்கு நிலத்தைத் தோண்டும்போது வைரக்கல் ஒன்று கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் கோடீஸ்வரராக மாறவிருக்கும் தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஏராளமான ரத்தினக் கற்கள், வைரக் கற்கள் அவ்வபோது கிடைக்கும் தகவல்களை இதற்கு முன்பே நாம் கேள்வி பட்டிருப்போம். அந்த வகையில் தற்போது கிஷோர் கன்ச் எனும் பகுதியில் வசித்துவந்த சாதாரண செங்கல் வியாபாரி சுஷில் சுக்லா என்பவர் கிருஷ்ணா கல்யாண் நகர் எனும் பகுதியில் செங்கலுக்காக மண்ணைத் தோண்டியுள்ளார். சுரங்கப் பகுதியான அந்த இடத்தில் திடீரென்று 26.11 கேரட் மதிப்புள்ள வைரம் அவருக்கு கிடைத்திருக்கிறது.

இதனால் கடந்த 20 வருடங்களாக ஓடியோடி உழைத்துவரும் சுஷில் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். இதனால் அவருடைய குடும்பமும் அளவில்லா மகிழ்ச்சியை அடைந்துள்ளனர். மேலும் செங்கலுக்காக மண்ணைத் தோண்டபோய் வைரம் கிடைத்திருப்பதை நினைத்து கடும் உற்சாகத்தில் இருந்துவருகின்றனர்.

இந்நிலையில் 26.11 கேரட் மதிப்புள்ள வைரத்திற்கு ராயல்டி மற்றும் வரித்தொகை பிடித்தம் போக சுஷிலுக்கு ரூ.1.20 கோடி அளவிற்கு பணம் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.