அப்படியே முகத்தில் குத்துவேன்… கேள்வியைச் சமாளிக்க முடியாமல் பத்திரிகையாளரை மிரட்டிய அதிபர்!!!

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

 

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அதிபராக பதவி ஏற்றுக்கொண்டது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கொரோனா பரவலின் ஆரம்பக் கட்டத்தில் கொரோனா வைரஸ் ஒரு காய்ச்சல் மட்டும்தான் இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு இருந்தார். இதற்குமுன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் அமோசான் காடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் உலகத்தின் பார்வையிலும் அதிபர் கடுமையான விமர்சனங்களைச் சந்திக்க வேண்டிவந்தது.

அப்போது பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அமோசானில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த உதவ முன்வந்தார். ஆனால் அதை ஜெய்ர் முற்றிலும் நிராகரித்து விட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது. தற்போது கொரோனா பாதிப்பிலும் அந்நாடு கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிபரை நோக்கி பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த அதிபர் உங்கள் முகத்தை நோக்கி குத்துவேன் என்று கூறியிருக்கிறார். அதோடு நிலைமையை கையாளத் தெரியாமல் செய்தியாளர் கூட்டத்தில் இருந்தும் அவர் விலகி சென்றிருக்கிறார்.

அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மனைவி மைக்கேல் போல்சனாரோவின் வங்கி கணக்கில் கடந்த 2011 முதல் 2016 வரை டெபாசிட் செய்யப்பட்ட வங்கித் தொகை குறித்து அந்நாட்டின் குளோபா பத்திரிக்கை கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தி இருந்தது. தற்போது அதிபருடன் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்திலும் அவருடைய மனைவி மைக்கேலின் வங்கிக் கணக்கு விவரங்களை குறித்த கேள்வியை குளோபா பத்திரிக்கை ஆசிரியர் எழுப்பினார். இதனால் கடுப்பான அதிபர் உங்கள் முகத்தை நோக்கி குத்தத் தோன்றுகிறது எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கு பல ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.