ரோட்டுக் கடையில் பீட்சா சாப்பிட்ட அதிபர்… காரணத்தைக் கேட்டு அரண்டுபோன நெட்டிசன்ஸ்!
- IndiaGlitz, [Friday,September 24 2021]
அமெரிக்கா மாகாணம் நியூயார்க்கில் தற்போது ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று நமது பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இதைப்போல அமெரிக்கா சென்ற பிரேசில் போல்சனேரோவிற்கு நியூயார்க் உணவகம் ஒன்று ஹோட்டலுக்குள் நுழைய அனுமதி மறுத்து இருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் நியூயார்க்கில் உள்ள உணவகம் ஒன்றிற்கு தனது அமைச்சர்களுடன் உணவருந்த சென்ற பிரேசில் அதிபர் போல்சனோரோவை பார்த்து அங்குள்ள ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை கேட்டுள்ளனர். இதற்குப் பதிலளித்த அதிபர் நான் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. ஐ.நா சபையே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத தலைவர்களையும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது என விளக்கம் அளித்து இருக்கிறார்.
இந்த விளக்கத்தை ஒப்புக்கொள்ளாத ஹோட்டல் ஊழியர்கள் மன்னித்துவிடுங்கள். எங்களுடைய உணவகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவித்து உள்ளனர். இதனால் சற்று அதிர்ச்சியடைந்த அதிபர் போல்சனேரோ அங்குள்ள ரோட்டுக்கடை ஒன்றில் தனது அமைச்சர்களுடன் பீட்சா சாப்பிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படம் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாக்களில் கடும் வைரலாகி வருகின்றன. கூடவே அதிபருக்கே மறுப்பு தெரிவித்த ஹோட்டல் ஊழியர்களின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில் அதிபருக்கே இந்தி நிலமையா? என்று அதிர்ச்சியையும் சிலர் வெளியிட்டு வருகின்றனர்.