ஸ்மார்ட் போனால் வரும் கொடிய ஆபத்து... எச்சரிக்கும் மருத்துவர்கள்!
- IndiaGlitz, [Wednesday,October 06 2021]
கொரோனா நேரத்தில் மனித வாழ்க்கை முறை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்விமுறையே மாறிப்போய் இருக்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான சிறுவர்கள் புதிதாக செல்போன் உபயோகிக்க துவங்கிவிட்டனர். முன்பெல்லாம் ஒருசில நிமிடங்கள் வரை பயன்படுத்திய செல்போனை, தற்போது மணிக்கணக்கில் பயன்படுத்த வேண்டிய தேவையும் எற்பட்டு இருக்கிறது.
ஒருவகையில் இந்த மாற்றம் வரவேற்கத் தக்கதுதான். ஆனால் செல்போனை தவறாக பயன்படுத்தத் துவங்கிய பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தற்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருப்பதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த வகையில் பெங்களூருவில் படித்துவந்த 15 சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் புதிய ஸ்மார்ட் போனை வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்தப் போனை பயன்படுத்தத் துவங்கிய 6 மாதங்களில் அந்தச் சிறுவனின் நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக அந்தப் பெற்றோர் தற்போது மனநல மருத்துவரை அணுகியுள்ளனர்.
அதிலும் கோபம், எரிச்சல், சமூகத்தை விட்டு விலகல், படிப்பில் தோல்வி போன்ற பல்வேறு மோசமான விஷயங்களை சிறுவன் செய்வதாக அவனுடைய பெற்றோர் குற்றம் சாட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்துக் கூறிய மனநல மருத்துவர்கள் பெரும்பாலான குழந்தைகளிடம் இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் மேலும் சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிகையும் அதிகரித்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.
பயமுறுத்தும் புள்ளிவிவரம்
பெற்றோர்களை இந்த ஆன்லைன் விளையாட்டுகள் ஒருபக்கம் பயமுறுத்த, அதுகுறித்த புள்ளிவிவரங்களும் தற்போது பீதியை கிளப்பி வருகிறது. அதாவது அனைத்திந்திய கேம் கூட்டமைப்பின் கணிப்பின்படி கிட்டத்தட்ட 300 மில்லியன் இந்தியர்கள் தினம்தோறும் ஆன்லைன் கேம்களை விளையாடி வருவதாக கணக்கு கூறப்படுகிறது. இதைத்தவிர கேமிங் ஃபெடரேஷன் தெரிவித்த ஒரு அறிக்கையில் வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் கேமிங் தொழிலானது 15,500 கோடி ரூபாயை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதாவது ஆன்லைன் கேம்களினால் வரப்போகும் லாபம் கூரையைப் பிய்த்துக் கொண்டுகொட்டப் போகிறது என அந்த அறிக்கை ஆருடம் சொல்லியிருக்கிறது. இதை வைத்துப் பார்த்தால் வரும்காலங்களில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு இன்னும் அதிகரித்து கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்களின் எண்ணையும் அதிகரிக்கத் துவங்கிவிடும். இதனால் கற்றல் திறனுக்கு ஆபத்து நேரும் என்று மனநல மருத்துவர்கள் இப்போதே எச்சரித்து வருகின்றனர்.