தந்தைக்கு தெரியாமல் ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன்: வங்கியில் இருந்து ரூ.90 ஆயிரம் திடீர் மாயம்!

  • IndiaGlitz, [Saturday,September 19 2020]

ஆன்லைன் கேம் விளையாடி ரூ.90,000 இழந்த சிறுவன் ஒருவனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஹிருத்திக் ரோஷன் என்ற சிறுவன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு அவரது தந்தை செல்போன் வாங்கி கொடுத்ததை அடுத்து அந்த செல்போனில் ஆன்லைன் வீடியோகேம் சிறுவன் விளையாடி வந்துள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் ஹிருத்திக் தந்தை அளித்த செக் ஒன்று பணம் இல்லாமல் திரும்பி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வங்கி கணக்கில் உள்ள பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் சுமார் 90,000 ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது தெரிந்தது

உடனே இது குறித்து அவர் தனது மகனிடம் விசாரித்தபோது ஆன்லைனில் பிரிமியர் கேமில் விளையாடும்போது 300 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் என கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் 90 ஆயிரம் செலுத்தியுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளான். மேலும் தந்தையின் செல்போனிலிருந்து ஓடிபி எண்ணையும் அந்த சிறுவன் எடுத்துள்ளது தெரிந்தது.

இதனையடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் கேம் விளையாடி 90,000 பணத்தையும் மகன் இழந்துள்ளார் என்பதை அறிந்து ஹிருத்திக் தந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுப்பது மட்டுமின்றி அந்த செல்போனை அவர்கள் எவ்வாறு உபயோகிக்கிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது