அஜித்துடன் குரலில் நடித்துவிட்டேன், விரைவில் நிஜத்திலும் நடிப்பேன்: போஸ்வெங்கட்
- IndiaGlitz, [Friday,December 01 2017]
சமீபத்தில் வெளியான கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்திக்கு அடுத்தபடியாக அனைவரையும் நடிப்பில் கவர்ந்தவர் போஸ் வெங்கட். இந்த படம் அவருடைய நடிப்பிற்கு ஒரு புதிய மைல்கல் என்றே கூறலாம். நடிப்பு மட்டுமின்றி வில்லன்களுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகிறார் போஸ் வெங்கட்.
அஜித்தின் 'வீரம்' படத்தில் வில்லன் அதுல்குல்கர்னிக்கும், அஜித்தின் இன்னொரு படமான 'என்னை அறிந்தால்' படத்தில் ஆசிஷ் வித்யார்த்திக்கும் போஸ் வெங்கட் குரல் கொடுத்துள்ளார். இதுவரை அஜித்துடன் குரலால் நடித்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து போஸ் வெங்கட் கூறுகையில் ,'தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன் என்று வார்த்தைகளால் எளிதாக விளக்கிவிட முடியும், தீரன் பட அனுபவத்தை ஆனால் உடலில் ஏற்படும் தண்ணீர் வறட்சியால், உதடுகள் பாலம் பாலமாக வெடித்து உடல் உபாதைகளுக்கு ஆளாகி உழைத்த உழைப்பு, இன்று திரைப்படம் பெற்றிருக்கும் மாபெரும் வெற்றி அந்தக் கடின அனுபவங்களை இனிய நினைவுகளாக மாற்றியிருக்கிறது என்கிறார், தீரன் படத்தில் நடித்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வரும்.
முன்னேற்படுகளுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் எங்களுக்கே இந்த கதியென்றால், நிதர்சனமாக களத்தில் நின்ற காவல் துறை அதிகாரிகளை நினைக்கும் போது, மனம் கனக்கிறது. அவர்களது அர்பணிப்பும், தியாகமும் ஈடுஇணை இல்லாதது, அவர்கள் அனைவருக்கும் முன்னால் நின்று நூறு சல்யூட் அடிக்கவேண்டும்.
திரையில் உண்மையான முகங்களை வெளிக்கொண்டு வர போராடிய இயக்குனர் ஹெச்.வினோத்தின் சுத்தமான வெற்றி இது. இயக்குநர் உண்டாக்கிய அந்த உடலில் புகுந்த விக்ரமாத்தியன் கார்த்தி சார். மூச்சுவிட முடியாத, பாலைவனத்தின் சுடுமணலில் மறைந்திருக்கும் அந்த ஒரு ஷாட் போதும், கார்த்தி சாரின் உழைப்புக்கு ஒரு சோறு பதம்' என்று நடிகர் போஸ் வெங்கட் கூறியுள்ளார்.