Download App

Boomerang Review

பூமராங்:  நதிநீர் இணைப்பை வலியுறுத்தும் படம்

ஒரு கெடுதல் செய்தால் அது எங்கேங்கோ சுற்றி மீண்டும் அந்த கெடுதல், செய்தவரையே தாக்கும் என்பதைத்தான் பூமராங் என்று சொல்வொம். இந்த படத்தின் வில்லனுக்கு பொருந்தும் வகையில் இயக்குனர் இந்த டைட்டிலை வைத்துள்ளார். இப்போது படம் எப்படி இருக்குது என்று பார்ப்போம்

கதையின் நாயகன் சிவா (அதர்வா) எதிர்பாராத ஒரு விபத்தில் சிக்குவதால் அவரது முகம் சிதைந்து போகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அதே மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த சக்தி (அதர்வா) முகத்தை வைத்து இவருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என கூற, அதற்கு சிவா ஒப்புக்கொள்ள, முகமாற்று அறுவை சிகிச்சையும் நடைபெறுகிறது.

குணமாகி வீடு திரும்பும் சிவா, சதீஷுடன் குடி, கொண்டாட்டம், மேகா ஆகாஷூடன் காதல், குறும்படத்தில் நடிப்பது என வாழ்க்கை ஜாலியாக சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஒரு கும்பல் அவரை கொலை செய்ய முயற்சிக்கின்றது. எந்த எதிரியுமே இல்லாத தன்னை யார் கொலை செய்ய முயற்சிக்கின்றனர் என்று அவர் ஆராயும்போது தனக்கு முகம் கொடுத்த சிவாவின் எதிரிகள் தன்னை கொலை செய்ய துரத்துவது தெரிய வருகிறது இதுகுறித்து உண்மையை தேடி கண்டுபிடிக்க செல்லும் அதர்வாவுக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. சிவாவுக்கு முகம் கொடுத்த சக்தி யார்? அவருக்கு என்ன பிரச்சனை? அவரை கொலை செய்ய முயற்சித்தது யார்? சக்தி முகத்தில் இருக்கும் சிவா என்ன செய்தார்? என்பதற்கான விடைகளே இந்த படத்தின் மீதிக்கதை ஆகும்

அதர்வா இரண்டு வேடங்களில் நடித்திருந்தாலும் இரண்டு கேரக்டர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் தாடி மட்டுமே. நடிப்பிலும் இரண்டு கேரக்டர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை அவர் காட்ட முயற்சிக்கவில்லை. இருப்பினும் ஆக்சன் காட்சிகளில் சுறுசுறுப்பாக உள்ளார். 

மேகா ஆகாஷ் கேரக்டருக்கும் படத்தின் மெயின் கதைக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லை. இருப்பினும் அவர் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளது. செயற்கைத்தனமில்லாத, அலட்டல் இல்லாத நடிப்பு நிச்சயம் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும். 

இந்துஜாவுக்கு படத்தின் கதையோடு தொடர்புடைய அழுத்தமான கேரக்டர். அவரும் அதனை மிஸ் செய்யாமல் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கலெக்டருடான மீட்டிங்கில் அவர் பேசும் வசனங்கள் சூப்பர்

முதல் பாதியில் சதீஷும், இரண்டாம் பாதியில் ஆர்ஜே பாலாஜியும் அதர்வாவுக்கு நண்பர்களாக வருகின்றனர். இருவரில் ஆர்ஜே பாலாஜி காட்சிகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது. அவ்வப்போது அரசியல், சமூக வசனமும் பேசி கைதட்டல் பெறுகிறார்.

உபன் பட்டேலின் வில்லத்தனமான நடிப்பு 'கத்தி' வில்லனை ஞாபகப்படுத்துகிறது. ஒரு சின்ன கேரக்டரில் சுஹாசினியும் நடித்துள்ளார்.

ராதான் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசை கதைக்கேற்றவாறு உள்ளதால் ஓகே. பிரசன்னகுமாரின் ஒளிப்பதிவு நதிநீரை இணைக்கும் கால்வாய் தோண்டும் காட்சியில் அவரது உழைப்பு தெரிகிறது. 

இந்த படம் வெளிவரும் முன் நதிநீர் இணைப்பு குறித்து பேசப்படும் படம் என விளம்பரம் செய்யப்பட்டது. இதனால்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியே படக்குழுவினர்களை அழைத்து பாராட்டு தெரிவித்தார். ஆனால் நதிநீர் இணைப்பு குறித்த காட்சிகளை மிகக்குறைவாகவே இயக்குனர் ஆர்.கண்ணன் வைத்துள்ளார். நதிநீர் இணைப்பு குறித்து அலசி ஒரு முழுப்படம் எடுத்தால் அதற்கே இரண்டு மணி நேரம் போதாது. ஆனால் ஒருசில காட்சிகளும் ஒரே பாடலில் கால்வாய் தோண்டுவது போன்றும் மேம்போக்காகவே சொல்லப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை, தண்ணீர் பிரச்சனை, கார்ப்பரேட் நிறுவனம் தரும் தொல்லைகள், விவசாயிகளுக்கு ஆதரவாக விஞ்ஞானபூர்வமாக உதவி செய்யும் ஹீரோ, ஆள்மாறாட்டம் இவை அனைத்தும் ஏற்கனவே 'கத்தி' படத்தில் முருகதாஸ் விளக்கமாக சொல்லிவிட்டார். இந்த படத்தின் பல காட்சிகள் 'கத்தி' படத்தை நினைவுப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் கிளைமாக்ஸ் நம்பவே முடியாதவாறு உள்ளது. கோடீஸ்வரரான வில்லன் மருத்துவமனையில் எந்தவித பாதுகாப்பும் இன்றி அரசு மருத்துவமனையில் இருப்பது போன்றும் அவரை சந்திக்கும் அதர்வாவின் காட்சிகளும் அதன்பின் நடக்கும் சம்பவங்களும் நம்ப முடியாதவாறு உள்ளது

இருப்பினும் ஐடி நிறுவனங்கள் மனசாட்சியே இல்லாமல் ஊழியர்களை வீட்டுக்கு துரத்தும் காட்சி, வெள்ளைக்காரன் நாட்டின் விவசாயிகளுக்காக வேலை செய்வதை விட விவசாய நாடான நம் நாட்டு விவசாயிகளுக்கு படித்த இளைஞர்கள் உதவி செய்ய வேண்டும் என்ற் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட காட்சிகளுக்காக இயக்குனரை பாராட்டலாம். இரண்டு கிராமத்திற்கு இடையே ஓடும் நதியை இணைக்கவே இத்தனை சிக்கல்கள் இருக்கும்போது ஒரு நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதெல்லாம் சாத்தியமா? என்றே படம் முடிந்து வெளிவரும்போது மனதில் கேள்விகள் எழுகின்றன. ஒரு பெண் கண்ணடிக்கும் வீடியோவை ஒரே நிமிடத்தில் ஒரு லட்சம் பேர் பார்க்குறாங்க, ஆனால் ஒரு விவசாயி கஷ்டத்தை யாரும் கண்டுகொள்வதில்லை' உள்பட ஒருசில வசனங்கள் கைதட்டலை பெறுகிறது

மொத்தத்தில் நதிநீரை இணைத்து நாட்டை வளப்படுத்த வேண்டும் என்ற இயக்குனரின் நல்ல நோக்கத்திற்காக இந்த படத்தை பார்க்கலாம்

Rating : 2.8 / 5.0