கமல்ஹாசனுக்கு பெரியார்-அம்பேத்கர் சிலைகளை பரிசாக வழங்கிய போனிகபூர் படக்குழு: எதற்கு தெரியுமா?

உலக நாயகன் கமலஹாசனுக்கு பெரியார், அம்பேத்கர் சிலைகளை போனிகபூர் தயாரித்த படத்தின் குழுவினர் வழங்கிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

போனி கபூர் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’நெஞ்சுக்கு நீதி’. இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் வசூல் அளவிலும் திருப்திகரமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை பார்த்த கமல்ஹாசன், பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். போனி கபூர், உதயநிதி ஸ்டாலின், அருண்ராஜா காமராஜ் ஆகியோரை நேரில் பாராட்டிய கமல்ஹாசன், தனது ’விக்ரம்’ படத்தை வெற்றி படமாக்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

இதற்கு உதயநிதி ஸ்டாலின் ’நெஞ்சுக்கு நீதி’ படக்குழுவின் சார்பாக அம்பேத்கர், பெரியார் சிலையை பரிசாக அளித்தார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: 'நெஞ்சுக்கு நீதி’ படத்தை பார்த்து குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் சாருக்கு நன்றி. ’விக்ரம்’ உடன் பங்கேற்றதற்காக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார்-அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம்.