இந்த வருடம் 'தல' தீபாவளி தான்: போனிகபூர் வெளியிட்ட மாஸ் தகவல்!

அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியிட வாய்ப்பு இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருப்பது அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. திட்டப்படி அனைத்தும் நடந்தால் இந்தப் படத்தை தீபாவளி அன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். ’ஏகே 61’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக போனிகபூர் கூறியதை அடுத்து இந்த ஆண்டு ’தல’ தீபாவளி தான் என அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

அஜித் ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.