கொரோனாவில் மீண்ட பாடகி கனிகாகபூரின் அதிரடி முடிவு!
- IndiaGlitz, [Tuesday,April 28 2020]
கொரோனாவை பரப்பும் வகையில் நடந்து கொண்டதாக பாலிவுட் பாடகி கனிகாகபூர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’உண்மையில் என்ன நடந்தது’ என்பது குறித்து கனிகாகபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவான விளக்கத்தை தந்திருந்தார்.
அதில் தான் யாருக்கும் கொரோனாவை பரப்பவில்லை என்றும் லண்டனில் இருந்து தான் மும்பை திரும்பிய போது விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை எதுவும் தொடங்கவில்லை என்றும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமாகி சமீபத்தில் வீடு திரும்பிய கனிகாகபூர், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கனிகாகபூர், பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்க முன்வந்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை நன்கொடையாக தந்தால் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைக்கு தற்போது வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த முறையால் கொரோனா பாதித்தவர்கள் விரைவில் குணமடைவதாக கூறப்படுவதால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை, பாதித்தவர்களுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதனை அடுத்து தற்போது கொரோனாவில் இருந்து மீண்ட கனிகாகபூர், பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவரது உடல் முழுபரிசோதனை செய்யப்படுவதாகவும் இதனை அடுத்து விரைவில் அவர் பிளாஸ்மாவை நன்கொடையாக தருவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.