இந்தி படங்களின் தொடர் தோல்விக்கு தென்னிந்தியர்கள் தான் காரணம்: நயன்தாரா பட நடிகர்

தென்னிந்திய திரைப்படங்களான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் 2, விக்ரம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று நூற்றுக்கணக்கான கோடிகளை வசூல் செய்து வருகிறது. ஆனால் பாலிவுட் திரைப்பட உலகில் பல பிரபலங்களின் படங்கள் கூட படு தோல்வியடைந்து வருகிறது. இந்தநிலையில் தென்னிந்திய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் பாலிவுட் படங்களின் தோல்விக்கு என்ன காரணம் என்று இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டபோது அதற்கு அவர் கூறிய பதில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்துள்ள அனுராக் காஷ்யப், இதற்கு பதில் கூறிய போது பாலிவுட் திரையுலகில் தற்போது ஹிந்தி தெரியாதவர்கள் எல்லாம் ஹிந்திப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் அவர்களால் இங்கு உள்ள மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைய முடியவில்லை. இந்த நிலை மாறவேண்டும். ஹிந்தி தெரிந்தவர்கள், ஹிந்தி கலாச்சாரம் தெரிந்தவர்கள் மட்டுமே ஹிந்தி படம் எடுக்க வேண்டும், அப்படி எடுத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.

தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை அந்தந்த மொழி தெரிந்தவர்கள் படம் எடுக்கிறார்கள், அதனால் அது கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து இருக்கிறது. அதனால் படமும் வெற்றி பெறுகிறது. ஆனால் பாலிவுட் திரையுலகில் அது தற்போது குறைந்து வருகிறது என்று கூறியுள்ளார்

பாலிவுட் திரையுலகில் அட்லி உள்பட ஒருசில தென்னிந்தியர்கள் படங்கள் இயக்கி வரும் நிலையில், அனுராக் காஷ்யப் இவ்வாறு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.