சுசாந்த் திடீர் மரணம்: திரையுலக, கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்

  • IndiaGlitz, [Sunday,June 14 2020]

ஏற்கனவே பாலிவுட் திரையுலகம் கடந்த சில நாட்களுக்கு முன் இர்பான் கான், ரிஷிகபூர் ஆகிய இரண்டு நடிகர்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் தற்போது பாலிவுட் உலகம் இளம் நடிகர் சுசாந்தையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த சோகத்தை தாங்க முடியாமல் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் கண்ணீருடன் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது, இளம் நடிகர் மிக விரைவில் சென்றுவிட்டார்; பொழுதுபோக்கு உலகில் அவரது வளர்ச்சி பலருக்கு ஊக்கம் அளித்தது

அரவிந்த் கெஜ்ரிவால்: இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் அதிர்ச்சியூட்டுகிறது. அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களை பெரும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவரது திரைப்படம் மற்றும் அவரது நடிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். இந்த இழப்பைச் சமாளிக்க அவரது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பலம் இருக்கட்டும்.

நடிகர் அக்சய்குமார்: ராஜ்புத்தின் தற்கொலை குறித்த செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்துவிட்டது. சிசோரே திரைப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து உற்சாகமடைந்ததுடன் அந்த படத்தில் நானும் நடித்திருக்க வேண்டும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. அத்தகைய திறமையான நடிகர் அவர். அவரது குடும்பத்திற்கு கடவுள் பலம் அளிக்கட்டும்

வீரேந்திர சேவாக்: வாழ்க்கை எளிதில் முறியக் கூடியது. ஒருவர் தனது வாழ்க்கையில் எதை எதிர்கொண்டு இருக்கிறார் என்பது நமக்கு தெரியாது

ஹர்பஜன் சிங்: சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிருடன் இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்த செய்தி பொய்யானதாக இருக்ககூடாதா

இர்ஃபான் பதான்: கடைசியாக சுஷாந்த் சிங்கை பார்த்தபோது, அவர் நடித்த 'கேதர்நாத்' திரைப்படம் நன்றாக இருந்தது என வாழ்த்து சொன்னேன். அவர் என்னிடம் சிசோரே படம் பாருங்கள் என கூறினார். தற்போது வந்துள்ள இந்த தற்கொலை செய்தி அதிர்ச்சியாக உள்ளது

நடிகை சிம்ரன்: ஒரு அற்புதமான திறமை மிக விரைவில் போய்விட்டது! உங்களை திரையில் இனி எப்போது பார்ப்போம்

விவிஎஸ் லட்சுமணன்: மன ஆரோக்கியம் என்பது மிகவும் தீவிரமான பிரச்சினை. அதைப் பெறுவதில் அதிக கவனம் தேவை.

ஹர்திக் பாண்ட்யா: மிகவும் மனம் வருத்தம் அடையும் செய்தி. இதயமே நொறுங்கியது. அவரை ஒரு சில முறை சந்தித்துள்ளேன். அவர் ஒரு மகிழ்ச்சியான நபர். அவரது அன்புக்குரிய அனைவருக்கும் வலிமை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.