நடிகர் அக்சயகுமாருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தல்
- IndiaGlitz, [Sunday,April 04 2021]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகி வரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், திரையுலகினர் உள்பட பல விஐபிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவுகிறது என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
நேற்று ரஜினியின் ’தர்பார்’ பட நடிகை நிவேதா தாமஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில் இன்று ரஜினி நடித்த ’2.0’ உள்பட பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்த அக்ஷய் குமாருக்கு கொரோனா பரவியுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
இன்று காலை எனக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக சோதனை மூலம் தெரியவந்தது. இதனை அடுத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி உடனடியாக நான் வீட்டிலேயே என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டேன். மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகிறேன். மேலும் என்னிடம் தொடர்பு கொண்டு இருந்த அனைவரும் தயவு செய்து உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். விரைவில் நான் குணமாகி வருவேன் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் என்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் தற்போது ஒரே நேரத்தில் ஆறு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.