கடலூர் ரசாயன ஆலையில் திடீர் விபத்து? 3 தொழிலாளர்கள் உயிரிழந்த அவலம்!
- IndiaGlitz, [Thursday,May 13 2021]
கடலூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பாய்லர் வெடித்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இன்று அதிகாலை 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிசெய்து கொண்டு இருந்தபோது அங்கிருந்த பாய்லர் திடீரென வெடித்து விட்டதாகவும் இதனால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் எப்போதும் போல தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாய்லர் வெடித்து சிதறத் தொடங்கி இருக்கிறது. இதனால் கொதிக்கும் ரசாயனம் 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது பட்டு அவர்கள் சுருண்டு விழத் தொடங்கியதாகவும் இதைப் பார்த்த மற்றவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயலும்போது அவர்கள் மீதும் ரசாயனம் தெளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர் என்று தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்தைப் பார்த்து பதறிப்போன தொழிலாளர்கள் பலரும் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறி கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.