Download App

Bogan Review

அனைவரும் ஊகித்தபடி, படத்தை உருவாக்கியவர்களும் அறிவித்தபடி., கூடுவிட்டு கூடுபாயும் வித்தை தெரிந்தவன் நடத்தும் ஆள்மாறாட்ட ஜாலங்களின்  கதைதான் ’போகன்’. ‘ரோமியோ ஜூலியட்’என்ற காதல் நகைச்சுவைப் படத்தைக் கொடுத்த இயக்குனர் லட்சுமண், இந்த முறை காதல், ஆக்‌ஷன், காமடி, செண்டிமெண்ட் ஆகியவற்றோரு கொஞ்சம் ஃபேண்டசி தன்மைக் கலந்த கதைக் களத்தைக் கையிலெடுத்திருக்கிறார். அதை ரசிக்கும்படி சொல்வதில் வெற்றிபெற்றிருக்கிறாரா என்பதை விமர்சனத்தில் தெரிந்துகொள்வோம்.

ஆதித்யா (அரவிந்த் சுவாமி), வாழ்க்கையில் அனைத்து சுக போகங்களையும் அனுபவிக்கும் ஒரு பெரும் பணக்காரன். தான் சந்தோசமாக வாழ்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பவன். பணத்துக்காக வங்கிகளிலும் நகைக் கடைகளிலும் கொள்ளையடிக்கிறான்.  தன்னிடம் உள்ள ஒரு அபூர்வ சக்தியைப் பயன்படுத்தி அந்தக் கொள்ளைக் குற்றங்களில் வேறொருவரை காவல்துறையிடம் சிக்கவைத்து தப்பித்துக்கொள்கிறான்.

விக்ரம் (ஜெயம் ரவி) ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி.  மகாலட்சுமி (ஹன்சிகா) என்ற பெண்ணுடன் திருமண நிச்சயம் ஆகிறது.

விக்ரமின் வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்துகொண்டிருக்கையில், அவனது அப்பா (ஆடுகளம் நரேன்) வேலை பார்க்கும் வங்கியில் பெரும்பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு அதில் விக்ரமின் அப்பாவை போலீஸிடம் சிக்கவைத்துவிட்டு தப்பித்துவிடுகிறான் ஆதித்யா.

அப்பாவை விடுவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தக் குற்றங்களை செய்வது யார், அவை எப்படி நடக்கின்றன என்ற விசாரணையைத் தொடங்குகிறான் விக்ரம். அதற்குப் பிறகு நடப்பவற்றைத் திரையில் காண்க.

படத்தைத் தோளில் தாங்கி நிற்பதும் படம் பெருமளவில் ரசிக்கும்படி இருப்பதற்கும் மிகப் பெரும்பங்களித்திருப்பது ஜெயம் ரவியும் அரவிந்த் சுவாமியும்தான். இவர்களது நடிப்பும் இவர்களது கதாபாத்திரங்களை வைத்து செய்யப்பட்டிருக்கும் திரைக்கதை ஜாலங்களும்தான் ‘போகன்’ படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.

 ‘தனி ஒருவன்’ படத்தில் தொடக்கம் முதல் கடைசி வரை ரவி நல்லவர், அரவிந்த் சுவாமி கெட்டவர். ஆனால் இந்தப் படத்தில் அப்படி அல்ல. இருவருக்குமே நல்லவராகவும் (ஹீரோவாகவும்) கெட்டவராகவும் (வில்லனாகவும்) நடிக்க வேண்டிய பணி. இரண்டையும் இருவரும் சிறப்பாக செய்திருக்கின்றனர்.

குறிப்பாக அரவிந்த் சுவாமியை சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் அப்பாவியாகவும் ஜெயம் ரவியை பசுத்தோல் போர்த்திய புலியாகவும் பார்ப்பது புதுமையான அனுபவத்தைத் தருகிறது. இந்த விஷயத்தை இவர்கள் இருவரும் கையாண்டிருக்கும் விதமும் ரசிக்கும்படி உள்ளது. இதை மேலும் ரசிக்கும்படி பல சுவாரஸ்யமான காட்சிகளை அமைத்திருக்கும் லட்சுமணன் பாராட்டுக்குரியவர். ஏதாவது ஒரு காட்சியை உதாரணம் காட்டி ரசிகர்களின் திரை அனுபவத்தைப் பாதிக்க விரும்பவில்லை. படத்தில் பார்த்து தெரிந்து (ரசித்துக்) கொள்ளுங்கள். இவற்றில் சில சிரிக்கவைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும் இருக்கின்றன.

இந்த இருவரின் ஆள்மாறாட்டத்தில் நாசர் ஏற்றிருக்கும் கதாபாத்திரமும் அதற்கு ஏற்படும் மாற்றமும் கடைசி அரை மணிநேர சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றது.

மேலே சொன்ன விஷயங்கள்தான் படத்தின் சிறப்பம்சங்கள். இவற்றைத் தவிர திரைக்கதையாசிரியர் வேறெதிலும் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை போலிருக்கிறது. படத்தில் எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகள். அரவிந்த் சுவாமி மாட்டிக்கொள்ளாமல் எப்படிக் கொள்ளையடிக்கிறார் என்பதற்கான விளக்கம்வி, ஜெயம் ரவிக்குக் கிடைக்கும் க்ளூக்கள், அதை வைத்து நடத்தப்படும் விசாரணை. அரவிந்த் சுவாமி மாட்டிக்கொள்ளும் விதம், அதன் பிறகும் தப்பிப்பது, காவல்துறை அலுவலகத்திலேயே சில பல கொலைகள் நடப்பது என்று அனைத்து விஷயங்களிலும் பல்வேறு விடையில்லாக் கேள்விகள். கூடுவிட்டுக் கூடுபாயும் அபூர்வ சக்தி ஃபேண்டசி தன்மை கொண்டது என்பதால் லாஜிக் பார்க்க வேண்டியதில்லை. என்று பொறுத்துக்கொள்ளலாம்.

படத்தின் நீளம் மற்றொரு குறை. குறிப்பாக முதல் பாதியில் ஹீரோ-வில்லன் அறிமுகத்துக்குப் பிறகு ஒரு 20-30 நிமிடங்கள் தொய்வு ஏற்படுகிறது. ரவி-ஹன்சிகா காதலிக்கத் தொடங்கி திருமணம் நிச்சயம் ஆகும் காட்சிகளில் புதுமையும் இல்லை சுவாரஸ்யமும் இல்லை ஆங்காங்கே கொஞ்சம் சிரிப்பு வருவதோடு சரி. இரண்டாம் பாதியும் கொஞ்சம் தேவைக்கதிகமாகவே நீள்வதாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஜெயம் ரவி நடிப்பைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான படம். தனக்கு வில்லன் நடிப்பும் வரும் என்று அபாரமாக நிரூபித்திருக்கிறார். அரவிந்த் சுவாமியும் தன்னால் அழகான புத்திசாலி வில்லனாக மட்டுமல்லாமல் அப்பாவியான மனிதனாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.

ஹன்சிகா அழகாக இருக்கிறார் கொஞ்சம் தாராளமாகவே கிளாமரும் காட்டியிருக்கிறார் . நடிப்புக்கு ஸ்கோப்பைத் திணித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நன்கு நடிக்க வேண்டும் என்ற முயற்சி தெரிகிறது.

ஆடுகளம் நரேண், நாசர், பொன்வண்ணன், ஆகியோர் தங்களது பங்கை சிறப்பாக் செய்திருக்கிறார்கள். அக்‌ஷரா கெளடா, (நீண்ட இடைவெளிக்குப் பிறகு) நாகேந்திர பிரசாத் மற்றும் ’ஆரம்பம்’ புகழ் அக்‌ஷரா கெளடா ஜெயம் ரவியின் துணை ஊழியர்களாக தங்களது இருப்பைப் பதிவு செய்கிறார்கள்.

டி.இமானின் பிண்ணனி இசை அபாரம். பாடல்கள் கேட்க இனிமையாக உள்ளன.  காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் கண்ணுக்கும் விருந்தாக அமைகின்றன. செளந்தரராஜனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்திலும் ஒரு ரிச்னெஸைக் கொண்டுவந்துவிட்டார். எடிட்டர் ஆண்டனி முதல் பாதியில் கொஞ்சம் வெட்டி இருக்கலாம். கலை இயக்குனர் யாரப்பா? முந்தைய பிரபுதேவா தயாரிப்பான ’தேவி’ படத்தில் வந்த அதே வீடு வருகிறதே? சில அவுட்டோர் காட்சிகளும் செட் போட்டு எடுக்கப்பட்டுள்ளது நன்றாகத் தெரிகிறது.

மொத்தத்தில் லாஜிக்கை மறந்துவிட்டு ஜெயம் ரவி-அரவிந்த் சுவாமி  மேஜிக்கை ரசிக்கலாம்.என்று சொல்ல வைத்த விதத்தில் இயக்குனர் லட்சுமணன் வென்றுவிட்டார்.

 

Rating : 2.8 / 5.0