கொரோனவின் உச்சம்…. ஒரு ஆம்புலன்ஸில் சாக்கு மூட்டைகளைப் போல  22 இறந்த உடல்கள்!

  • IndiaGlitz, [Tuesday,April 27 2021]

நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருக்கிறது எனத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டி வருகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் உயிரிழப்பும் தற்போது எகிறி வரும் நிலையில் இறந்தவர்களின் உடலை அப்புறப்படுத்துவதிலும் அந்த மாநில மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அவுரங்காபாத் அடுத்த பீட் நகரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஒரே ஆம்புலன்ஸில் வைத்து கொரோனாவால் உயிரிழந்த 22 உடல்களை ஏற்றிச் சென்றுள்ளது. இதுகுறித்து கடும் அதிருப்தி எழுந்த நிலையில் சுவாமி ராமனந்தா தீர்த் எனப்படும் அந்த மருத்துவக் கல்லூரியின் நிர்வாகம் கொரோனா தீவிரம் அடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருக்கிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து ஒரே ஆம்புலன்ஸில் சாக்கு மூட்டையை அடுக்குவது போல உயிரிழந்தவர்களுக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளலாமா என்ற குற்றச்சாட்டை பலரும் எழுப்பி வருகின்றனர். அதோடு உச்சநீதிமன்றம் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு எந்த அவமதிப்பும் ஏற்படக்கூடாது என எச்சரித்துள்ள நிலையில் பல இடங்களில் அப்புறப்படுத்துவதில் மெத்தனம் காட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.