அப்துல் கலாமுக்கு சமர்ப்பணம் செய்யும் 'கோ 2' படக்குழுவினர்

  • IndiaGlitz, [Wednesday,August 12 2015]

பாபிசிம்ஹா நடித்து வரும் "கோ 2" படக்குழுவினர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு ஒரு பாடலை விரைவில் சமர்ப்பணம் செய்யவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர்களிடம் உதவியாளராக இருந்த இந்த படத்தின் இசையமைப்பாளர் லியோ ஜேம்ஸ் வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சிங்கிள் பாடலை ரிலீஸ் செய்யவுள்ளார்.

தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமார் எழுதியுள்ள இந்த பாடல் "உன்னை மாற்றினால்" என்று தொடங்குகிறது. இந்த உலகத்தை நீ மாற்ற விரும்பினால் உன்னை நீ முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும்' என்ற அப்துல்கலாமின் கருத்தை வலியுறுத்துவதாக அமைந்திருக்கும் இந்த பாடலை அவர்க்கு சமர்ப்பிப்பதில் பெருமைப்படுவதாக லியோ ஜேம்ஸ் கூறியுள்ளார். இந்த பாடலை ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளார்.

பாலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் 'கோ 2' படத்தில் பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், 'டார்லிங்' நாயகி நிகில்கல்ரானி, பாலசரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பாபிசிம்ஹா பத்திரிகை ரிப்போர்ட்டராகவும், பிரகாஷ்ராஜ் அரசியல்வாதியாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிலிப் சுந்தர் ஒளிப்பதிவும், அந்தோணி எல்.ரூபன் அவர்கள் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.