தோல்வி அடைந்தாலும் மக்களின் மனங்களை வென்ற இந்திய வீராங்கனைகள்

  • IndiaGlitz, [Monday,July 24 2017]

நேற்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் கடைசி வரை வெற்றிக்காக போராடிய வீராங்கனைகளின் மன உறுதியால் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களை வென்றுவிட்டனர்.

இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது அரிதான விஷயமாக இருந்தாலும் வெற்றியின் விளிம்பு வரை இந்திய அணியை கொண்டு சென்ற கேப்டன் மிதாலி ராஜூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜூனியர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் சாமுண்டீஸ்வர்நாத் அவர்கள் மிதாலிக்கு பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை பரிசளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரையிறுதி போட்டியில் 171 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டவரும், இறுதி போட்டியில் 51 ரன்கள் எடுத்தவருமான ஹர்மன்ப்ரீத் கவுர் அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக பஞ்சாப் மாநில அரசு தெரிவித்திருந்தது. மேலும் அவருக்கு பஞ்சாப் காவல்துறையில் பணி வழங்குவதாக அந்த மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவித்த நிலையில் தற்போது அவர் பஞ்சாப் காவல்துறையில் டிஎஸ்பி-யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்திய அணி வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி, பிரபல கிரிக்கெட் வீரர்கள் சச்சின், சேவாக் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் அக்சயகுமார் நேற்றைய போட்டியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேரடியாக பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.