அமெரிக்காவில் 7 ஆவது நாளாக தொடரும் கறுப்பினத்தவர் போராட்டம்!!! இராணுவத்தை அழைத்து இருக்கும் அதிபர் ட்ரம்ப்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் மிணசோட்டா மகாணத்தில் மினியா காவல் நிலையப் பகுதியில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் காவல் துறையினரால் விசாரிக்கப்படும் போது உயிரிழந்தார். இச்சம்பவம் கறுப்பினத்தவர்களின் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலாக விமர்சிக்கப் பட்டது. அதையடுத்து ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மரணத்திற்கு நீதிக்கேட்டும் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் கறுப்பினத்தவர்கள் இறப்பது குறித்த செயலுக்கு விளக்கம் கேட்டும் அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் போராட்டங்கள் தொடர்ந்தன. கடந்த மே 25 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் அதிபர் ட்ரம்ப் வெளிட்ட ட்விட்டர் பதிவுகளால் தற்போது தீவிரம் அடைந்து இருக்கிறது.
இந்நிலையில் போராட்டங்கள் சில நேரங்களில் வன்முறையாகவும் மாறி அமெரிக்காவில் முழுவதும் கடும் பதட்டம் நிலவி வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதுவரை 75 நகரங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களைத் தவிர்ப்பதற்காக தற்போது 45 நகரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டு இருக்கிறது. கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ, சான் ஜோஸ், சாண்ட் கிளாரா, லுக் லேண்ட் போன்ற பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து இருக்கின்றன. சியாட்டி நகரில் போராட்டங்கள் வன்முறையாக மாறியிருப்பதாகவும் காவல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். பல நேரங்களில் கண்ணீர் புகைக் குண்டு வீசப்படுவதாகவும் அதனால் புகை மூட்டம் எழுவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
போர்ட் லேண்ட் இல் அமைதியான வழிமுறையில் போராட்டங்கள் தொடருவதாகவும் கூறப்படுகிறது. வால் நட் க்ரூக் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் காரில் வந்து போராட்டக் குழுவில் இருந்த ஒரு பெண்ணை சுட்டு விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் இறந்ததற்கான காரணம் குறித்த பிரேதச பரிசோதனை வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில் அவரின் உயிரிழப்பு கொலை என்றே பதிவாகி இருக்கிறது. கழுத்தில் வேகமாக அழுத்தப்பட்டதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு பின்பு மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை சொல்கிறது. மருத்துவ அறிக்கை வெளியான பின்பு போராட்டங்கள் மீண்டும் வலுப்பெற்று இருப்பதாகவே கூறப்படுகிறது.
தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை நோக்கி சென்ற போராட்டக்காரர்கள் கடந்த வெள்ளிக் கிழமையில் இருந்து தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அதோடு வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள பழைய தேவாலயம் ஒன்றிற்கு போராட்டக் காரர்கள் தீ வைத்ததாகவும் இதனால் கோபமடைந்த அதிபர் ட்ரம்ப் தற்போது பாதுகாப்புக்கு இராணுவத்தை அழைத்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முதலில் இப்போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த அதிபர் ட்ரம்ப் “போராட்டங்களின்போது சூறையாடல் தொடங்கினால் சுடப்படுவதும் தொடங்கும்” எனப் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவினை ட்விட்டர் பக்கம் வன்முறையைத் தூண்டக்கூடியது என அடையாளப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால் அந்தப் பக்கத்தை நீக்காமல் இருப்பதைக் குறித்து அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள ரோஸ் கார்டனுக்கு நடந்து வந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அதில் “ஒரு அதிபராக அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் காப்பாற்ற வேண்டியது என் கடமை. அமெரிக்கச் சாலைகளில் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த ராணுவம் அனுப்பப்படும்” என்று கூறியிருக்கிறார். தற்போது, தொடரும் போராட்டங்களை இந்த வழிமுறையைப் பயன்படுத்தி ஒருபோதும் நிறுத்த முடியாது. அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கை பிரச்சனையை தீர்ப்பதற்கு வழிவகுக்காது எனவும் விமர்சனம் எழுந்திருக்கிறது.
மேலும், கலவரம், கொள்ளை, தாக்குதல் மற்றும் சொத்துகளை அழிப்பதை நிறுத்தவும் சட்டத்தை மறுக்கும் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ராணுவம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்த தயாராக இருக்கிறேன் எனவும் ட்ரம்ப் கூறியிருக்கிறார். அதோடு தற்போது அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் அமைதியான போராட்டம் அல்ல. இவை உள்நாட்டு பயங்கரவாதச் செயல் என்றே அவர் பேசியிருக்கிறார். அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிப்பதும், அப்பாவி மக்கள் ரத்தம் சிந்தப்படுவதும் மனிதக் குலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும். கடவுளுக்கு எதிரான குற்றமாகும் எனவும் தனது உரையை முடித்திருக்கிறார். அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்திக்கும் முன்பு தீ வைக்கப்பட்ட தேவாலயத்திற்கு நடந்து சென்றார் என்பதையும் கையில் பைபிள் வைத்திருந்தார் என்பதையும் ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் மளிகை கடை ஒன்றில் 20 டாலர் கள்ளப்பணம் செலுத்தியதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காவல் அதிகாரிகள் அவரை விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. பின்பு நேரில் வந்த 4 காவல் துறையினர் அவரை காரை விட்டு கீழே இறங்கச் சொன்னதாகவும் அவர் இறங்காததால் வலுக்கட்டாயமாக காருக்குக் கீழே நகர்த்தி கை விலங்கிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா கறுப்பினத்தவர் அவமதிக்கப்படுவது தொடர்ந்து நடைபெறும் செயல். இந்தப்பிரச்சனை உடனே தீர்க்கப்பட வேண்டும் என தொடர்ந்து போராட்டக்காரார்கள் வலியுறுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. தற்போது பிரச்சனையைத் தீர்க்காமல் அதிபர் ட்ரம்ப் இராணுவத்தை துணைக்கு அழைத்து இருப்பதால் மேலும் பரபரப்பு அதிகமாகி இருக்கிறது. ஏற்கனவே கொரோனா தாக்குதலால் நிலைக்குலைந்து இருக்கும் அமெரிக்கா தற்போது இரட்டை தலைவலியைச் சந்தித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்குமுன்பு 1968 இல் மார்டின் லூதர் கிங்கின் மரணத்திற்கு நியாயம் கேட்டு அமெரிக்காவில் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. தற்போது அதேபோல ஒரு நெருக்கடியை அமெரிக்கா சந்தித்து வருவதாகவும் அரசியல் ஆலோசகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments