ஏடிஎம் மிஷினுக்கு திதி. பிரதமருக்கு லட்டு பிரசாதம் அனுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
- IndiaGlitz, [Saturday,December 10 2016]
பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்-கள் செயல்படாமல் உள்ளது. இதனால் அவசர தேவைக்கு பணம் எடுக்க பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். புதிய ரூ.500 மற்றும் புதிய ரூ.100 நோட்டுக்கள் இதோ வருகிறது, அதோ வருகிறது என ஆட்சியாளர்கள் மாறி மாறி அறிக்கை கொடுத்து வருகின்றனர்களே தவிர வங்கிகளில் பெரும்பாலும் ரூ.2000 நோட்டு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பெங்களூரில் ஜனதா தள் கட்சியினர் இதுகுறித்து கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் உச்சகட்டமாக இன்று டம்மி ஏடிஎம் மிஷின் ஒன்றை உருவாக்கி அதற்கு திதி கொடுத்தனர். ஐயரை வைத்து முறைப்படி நடந்த இந்த திதிக்கு பின்னர் லட்டு, வடை போன்ற பிரசாதங்கள் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புதுமையான ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.