ஏன் ஒரு பணக்காரர் கூட வங்கியின் வரிசையில் நிற்கவில்லை? சில அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Saturday,November 19 2016]

கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு சரியான நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், எந்த நோக்கத்திற்காக அவர் அறிவித்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறுமா? என்ற சந்தேகம் தற்போது பலருக்கு எழுந்துள்ளது.
கடந்த 9ஆம் தேதியில் இருந்து வங்கியின் முன்பும், ஏ.டி.எம் முன்பும் வரிசையில் மணிக்கணக்காக காத்திருப்பது ஏழை எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்கள்தான். இவர்கள் அதிகபட்சம் தங்களது வீட்டில் ரூ.50000 அல்லது அல்லது ஒரு லட்ச ரூபாய் வைத்திருப்பார்கள். ஆனால் கோடி கோடியாய் கருப்புப்பணமோ அல்லது வெள்ளை பணமோ வைத்திருக்கும் நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், ஆகிய யாருமே இதுவரை வங்கியின் வரிசையில் நின்றதாக ஒரு செய்தி கூட வரவில்லை. ராகுல்காந்தி ஒரே ஒரு நாள் மட்டும் வந்து பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு ரூ.4000 வாங்கி சென்றார். அந்த 4000 அவருடைய இத்தனை நாள் செலவுக்கு போதுமா?
பெரிய பெரிய பணக்கார்ர்கள், கருப்பு பண முதலைகள் வங்கிக்கு வராவிட்டாலும் அவர்களுடைய பணம் புதிய நோட்டுக்களாகவும், வெள்ளையாகவும் மாறிவிட்டது அல்லது மாறிக்கொண்டே இருக்கின்றது என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.
பிரதமரின் இந்த அறிவிப்பால் ஒரு புதிய தொழில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுதான் கமிஷன் ஏஜெண்டுக்கள். பெரிய பெரிய தொழிலதிபர்கள் , சினிமா நட்சத்திரங்கள், உள்பட பல பண முதலைகள் சென்னையின் முக்கிய பகுதியில் உள்ள கமிஷன் ஆட்களை அணுகி தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை கொடுக்கின்றார்களாம். 30% கமிஷன் பெற்றுக்கொண்டு அந்த கமிஷன் புரோக்கர்கள் அவர்களுடைய பணத்தை மாற்றி தருவதாக கூறப்படுகிறது. வங்கிக்கு சென்றால் 70% அபராதம் செலுத்திவிட்டு 30%தான் கைக்கு வரும் என்பதால் நஷ்டத்தில் லாபம் என்ற கணக்கில் பலர் இந்த கமிஷன் ஏஜெண்டுக்களை அணுகுகிறார்களாம்
சரி, இந்த கமிஷன் ஏஜெண்டுக்கள் எப்படி பணத்தை மாற்றுகிறார்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். ஆனாலும் இதுகுறித்த குறித்த தகவலை தேசிய அளவிலான இன்டலிஜென்ஸ்' ஆட்கள், ரிப்போர்ட் எடுத்து மத்திய அரசுக்கு அறிவித்ததாகவும், இதன் காரணமாகவே பல நகரங்களில் நகைக்கடைகளில் ரெய்டு நடந்தததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.