பீதியை கிளப்பும் பிளாக் பங்கஸ்… 50 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Friday,May 14 2021]

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயில் இருந்து மீண்டு வரும் சிலருக்கு மியூகோர்மைகோசில் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருவதாக இந்திய மருத்துவர்கள் கடந்த சில தினங்களாக கவலை தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் இந்த பூஞ்சைத் தொற்றால் 52 பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநிலச் சுகாதாரத்துறை தற்போது அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறது.

கருப்பு பூஞ்சை எனப்படும் பூஞ்சை தொற்றுநோய் எதிர்ப்பு சக்தி குறைந்துபோன நோயாளிகளுக்கு அரிதாக தோன்றும். இந்த நோய் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அதுவும் கொரோனாவில் இருந்து மீண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போன நபர்களின் உறுப்புகளில் மியூகோர்மைகோசில் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பரவி சில தினங்களிலேயே அவர்களின் உறுப்புகளை சிதைத்து விடுவதாகவும் அதோடு இந்த பூஞ்சை மூளையைத் தாக்கும்போது விரைவில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இந்த பூஞ்சையினால் சிதைக்கப்பட்ட உறுப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டிய தேவையும் இருக்கிறது. இதனால் மும்பையில் இதுவரை 10 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண்கள் அகற்றப்பட்ட கொடூரமும் நடந்து இருக்கிறது.

மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களில் மட்டுமே 1,500 க்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் நோய் பாதிப்பு ஏற்பட்ட 52 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதனால் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு எதிராக செலுத்தப்படும் தொற்றுக்கு செலுத்தப்படும் Amphotericin-B எனப்படும் மருந்துக்கு அந்த மாநில அரசு தற்போது டெண்டர் விடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.