மரணத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்...! மருத்துவர் கூறுவது என்ன...?
- IndiaGlitz, [Wednesday,May 12 2021]
கருப்பு பூஞ்சை நோயானது, மூக்கிலிருந்து கண்களுக்கும், பின் மூளைக்கும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மருத்துவர் அமர் அகர்வால் கூறியிருப்பதாவது,
கண்கள் சிவப்பாக இருந்தால், அதை சாதாரணமாக மக்கள் எடுத்துக்கொள்ள கூடாது. அது கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம் என மருத்துவர் அமர் அகர்வால் கூறியுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு பொதுவாகவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சில நோயாளிகளுக்கு கேன்சர், நீரிழிவு நோய் போன்றவை இருக்கும். இதனால் சிகிச்சைக்காக ஸ்டீராய்டுகள் மற்றும் செயற்கை பிராண வாயுவை அதிகமாக கொடுப்பதால் நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைகின்றது.
மனிதனுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, நோய்கள் வர வாய்ப்புள்ளது. மியூகோர்மைகோசிஸ் என்ற பூஞ்சை தொற்றுதான் உடலில் தொற்றிக்கொள்கிறது. இந்த பூஞ்சை முதலில் மூக்கு, வாய் உள்ளிட்ட உறுப்புகளில் தொற்றை பரப்புகிறது. இது பரவிய பின் கண்களை பாதிப்படையச்செய்கிறது. இந்த தொற்று முகத்தில் இருக்கும்போதே குணப்படுத்தி விட வேண்டும். இல்லையெனில் மூளைக்கு சென்று உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்த தொற்று உடலில் வந்தவுடன், தோலில் உள்ள செல்கள் இறந்து கருப்பு நிறமாக மாறிவிடும். மூக்கிலிருந்து வரக்கூடிய சைலைவா-வும் கருப்பு நிறத்தில் இருக்கும்.
தூங்காமல் இருந்தால் கண்களை சுற்றி ஏற்படும் கருப்பு வளைத்திற்கும், இந்த பூஞ்சை தொற்றுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த தொற்று கண்களில் பாதிப்பை ஏற்படுத்தினால், கண்களை எடுக்கும் அளவிற்கு பாதிப்பு ஏற்படும். கண்களில் தொடர்ந்து வலி இருந்தாலோ, திடீரென பார்வை குறைபாடு ஏற்பட்டாலோ, கண் சிவந்தாலோ உடனடியாக நீங்கள் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.