பா.ஜ.க. வின் புதிய தலைவராகத் ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வு
- IndiaGlitz, [Monday,January 20 2020]
ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் நட்டா (ஜே.பி. நட்டா) அக்கட்சியின் புதிய தலைவராகியுள்ளார். கடந்த ஜுன் மாதம் முதல் பா.ஜ.க. வின் செயல் தலைவராகப் பணியாற்றி வந்த இவர் தற்போது போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
பாரதிய ஜனதா கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப் பட்டு வருகிறது. அதன்படி 2014 இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது ராஜ்நாத் சிங் அக்கட்சியின் தலைவராகப் பணியாற்றினார். அப்போது அமைக்கப்பட்ட மந்திரி சபையில் ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டது. எனவே பா.ஜ.க. வின் புதிய தலைவர் பொறுப்பு மூத்த தலைவரான அமித் ஷா விற்கு வழங்கப்பட்டது.
பின்னர் அடுத்த தேர்தலிலும் (2019) பா.ஜ.க. ஆட்சியினைப் பிடித்தது. அந்த அமைச்சரவையில் அமித் ஷாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. என்றாலும் கட்சியின் தலைவர் பதவியை அமித் ஷா தொடர்ந்து செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு உதவியாக செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.
அவ்வாறு உருவாக்கப்பட்ட செயல் தலைவர் பதவியில் தான் முன்னாள் சுகாதார துறை மந்திரியாக பணியாற்றிய ஜே.பி. நட்டாவை அக்கட்சி நியமித்தது. அதன்படி கடந்த 17 ஜீன், 2019 முதல் அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக பணியாற்றி வந்தார் ஜே.பி. நட்டா. இந்நிலையில் கட்சிக்குப் புதிய தலைவர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது. அதன்படி இன்று ஜனவரி 20, காலை 10 மணி முதல் 12. 30 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலுக்கு ஜே.பி. நட்டா வேட்புமனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனு தாக்கலின்போது மாநில கட்சி தலைவர்களும், மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர்.
பா.ஜ.க. வின் புதிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பெயரை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் முன்மொழிந்தனர். பாராதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு ஜே.பி. நட்டாவைத் தவிர வேறு எவரும் போட்டியிட வில்லை என்பதால் போட்டியின்றிப் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
ஜே.பி. நட்டா இமாசல பிரதேச பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்தவர். இமாசல மாநில சட்டசபை உறுப்பினராக 1993 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மாநிலங்களவை எம்.பி. ஆனார். தொடர்ந்து மோடி அரசின் முதல் மந்திரி சபையில் சுகாதார துறை மந்திரியாகப் பணியாற்றினார். தற்போது கட்சியின் செயல் தலைவர் பதவியில் இருந்து கட்சி தலைவராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. வருகின்ற 22 ஆம் தேதி கட்சியின் அதிகாரப் பூர்வத் தலைவராக ஜே.பி. நட்டா பொறுப்பேற்க உள்ளார். இதற்காக பா.ஜ.க. பிரம்மாண்ட விழா எடுக்கு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.