மீண்டும் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலை: கானல் நீராகும் ஸ்டாலின் முதல்வர் கனவு

கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியதால் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தமிழக மக்கள் மட்டும் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தனர். பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் மட்டுமே வெற்றி பெற்றார். அதிமுக 37 தொகுதிகளிலும் பாமக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

அதேபோல் இந்த தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராகவே தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர். நாடு முழுவதும் பாஜக கூட்டணி 320க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சிக்கு தேவையான எண்ணிக்கையை பெற்றுவிட்டனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜகவுக்கு எதிராகவே முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. பாஜக இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அதிமுக ஆட்சி மீது தமிழக மக்களுக்கு கோபம் இல்லை என்பதை சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றது. 22 சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் 10 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. இதே ரீதியில் முடிவும் அமைந்தால் அதிமுக ஆட்சி ஐந்து வருடங்களை நிறைவு செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வழி இல்லாததால் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையிலும், மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாத நிலையிலும் திமுக தலைவர் ஸ்டாலின் நிலை உள்ளதால் அவரது முதல்வர் கனவு கானல்நீராகவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.