இது அப்பட்டமாக சமுதாயத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய செயல்: 'துணிவு' படம் குறித்து பாஜக பிரமுகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் சென்சார் அதிகாரிகளால் நீக்கப்பட்ட காட்சிகள், மியூட் செய்யப்பட்ட வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திரைப்படங்களை முறைப்படுத்துவதற்கு திரைப்பட சான்றிதழ் வாரியம் செயல்பட்டு வருகிறது. திரைப்படங்கள் வெளியாவதற்கு முன் இந்த வாரியத்தின் உறுப்பினர்கள் இந்த படங்களை பார்வையிட்டு விதிகளின் படி காட்சிகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து விதிமீறல்கள் உள்ள காட்சிகளை, வசனங்களை நீக்க சொல்லிய பின்னர் மீண்டும் பார்வையிட்டு திரைப்படத்தை வெளியிடுவதற்கான சான்றிதழை அளிப்பார்கள்.
திரைப்பட சான்றிதழ் வாரியத்தை பொறுத்த வரை ஆபாசமான, அதிக வன்முறை மிக்க காட்சிகளையும், தரக்குறைவான வசனங்களை மட்டுமே நீக்க சொல்வது வழக்கம். சமீப காலங்களில் இணைய வழி சினிமா திரை (OTT)மூலம் இந்த படங்கள் விரைவில் வெளிவருகின்றன. அப்படி இணைய வழி திரையில் வெளிவரும் வேளையில், நீக்கப்பட்ட காட்சிகளை, வசனங்களை அதில் இணைத்து வெளியிடுகின்றனர்.அதாவது எது தவறு, ஆபாசம், விதி மீறல் என்று குறிப்பிட்டு நீக்கப்பட பரிந்துரைக்கப்பட்டனவோ அவைகளை இணைத்து திரையிடுகின்றனர்.
இது அப்பட்டமாக சமுதாயத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய செயலாகும். சமீபத்தில் பொங்கலையொட்டி வெளியான ஒரு பிரபல நடிகர் நடித்த படத்தில் இடம்பெறாத சில காட்சிகளும், வசனங்களும் OTT திரையில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அந்த படத்தில் தரக்குறைவான வார்த்தைகளை அந்த பிரபல நடிகரே உச்சரிப்பது கடும் கண்டனத்திற்குரியது. குறிப்பாக பலமுறை திரைப்பட சான்றிதழ் வாரிய குழுவால் நீக்கப்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது சமுதாய சீரழிவுக்கே வழிவகுக்கும்.
இது குறித்து அத்திரைப்படம் தொடர்பான முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசிய போது, இது போன்ற தகாத, தீய சொற்களை தமிழக இளைஞர்கள் அதிகம் விரும்புவதாக சொன்னது பேரதிர்ச்சியை அளிக்கிறது. சமுதாயத்தை சீர்படுத்த வேண்டிய, முறைப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆனால்,தங்களின் பட வெற்றிக்காக, வியாபாரத்திற்காக அடுத்த தலைமுறையை சீரழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இணைய வழி திரைக்கு சில சுயகட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது அரசு. அதை பின்பற்ற வேண்டியது திரை துறையினரின் கடமை.
எது தவறு, தீங்கானது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்று குறிப்பிடப்பட்டு திரைத்துறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டதோ, அதையே வேறொரு வழியில் மக்களிடம் கொண்டு செல்வது துரோகம் அல்லவா? குறிப்பாக தங்களின் ஆதர்ச நாயகர்களாக பாவித்து கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் விதத்தில் காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறாமல் கவனித்து கொள்ள வேண்டியது பிரபல கலைஞர்களின் கடமையல்லவா?. சுய கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு, சுய தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் அரசின் கட்டுப்பாடு இல்லையென்ற ஒரே காரணத்திற்காக சமுதாயத்தை சீரழிக்கலாமா? அதிலும் பிரபலமான நடிகர்கள், இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டாமா?
அரசின் வழிகாட்டுதல்களின் படி, சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டியது திரைத்துறையினரின் கடமை மற்றும் பொறுப்பு. அதை விடுத்து, பணத்திற்காக வியாபாரத்திற்காக சமூகத்தை சீரழிக்கும் அவலங்களை திணிப்பது கேட்டை விளைவிக்கும்.இருக்கும் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்துவதே அழகு. இல்லையேல், அந்த சுதந்திரம் கேள்விக்குறியாகி விடும்’ என்று தெரிவித்துள்ளார்.
நாராயணன் திருப்பதி: துணிவா ஒரு தாக்கு... ஓடிடியில் தரக்குறைவா, அதுவும் அந்த நடிகரே! https://t.co/3XKoLmJJfT
— Narayanan Thirupathy (@narayanantbjp) February 17, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout