#CAA க்கு ஆதரவாக பேசவந்த பாஜக எம்.பியை 6 மணி நேரம் நகரவிடாமல் சிறை பிடித்த மாணவர்கள்..!
- IndiaGlitz, [Thursday,January 09 2020]
மேற்கு வங்க மாநிலத்தின் சாந்திநிகேதனில் குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கிப் பேச வந்த பா.ஜ.க ராஜ்யசபா எம்.பி ஸ்வப்பன் தாஸ் குப்தாவை, மாணவர்கள் 6 மணி நேரம் சிறைபிடித்து வைத்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கட்தொகை பதிவு ஆகியவற்றை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்க மாநிலத்தில் விஷ்வ பாரதி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, சாந்தி நிகேதனில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்க உரையாற்ற பா.ஜ.க ராஜ்யசபா எம்.பி ஸ்வப்பன் தாஸ் குப்தாவுக்கு துணைவேந்தர் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு மாணவர்கள் பலரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று போராட்டம் நடந்து கொண்டிருந்த போது பா.ஜ.க எம்.பி ஸ்வப்பன் தாஸ் குப்தா பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்தார். குடியுரிமைச் சட்டம் குறித்து உரையாற்ற பா.ஜ.க செய்தி தொடர்பாளரை அழைப்பதா எனக் கோபமுற்ற மாணவர்கள், அவரை சிறைபிடித்து வைத்தனர்.
பல்கலைக்கழக நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதற்குப் பிறகு சுமார் 6 மணி நேரம் கழித்து, சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த ஸ்வப்பன் தாஸ் விடுவிக்கப்பட்டார். இந்நிகழ்வு பா.ஜ.க வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.