CAA-வை கிழித்து எறிந்துவிட்டு அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை பின்பற்றுவோம்..! பாஜக எம்.எல்.ஏ.
- IndiaGlitz, [Thursday,January 30 2020]
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. இச்சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி இந்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. நாட்டில் முதல் முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதோடு, இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாகும் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றும் மத்திய அரசு கூறிவரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்நாட்டுப் போா்ச்சூழலை உருவாக்கியுள்ளதாக, மத்திய பிரதேச மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ நாராயண் திரிபாதி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் மைஹா் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏவான நாராயண் திரிபாதி இதுதொடர்பாக கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஒவ்வொரு போராட்டமும் உள்நாட்டு போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது. இது நமது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடியது. இந்தச் சூழலில் நம்மால் வளர்ச்சியை கற்பனை செய்து பார்க்ககூட முடியாது. இதுதொடர்பாக நான் புரிந்துகொண்டபிறகு தற்போது இந்தச் சட்டத்தை எதிர்க்கிறேன்.
நாட்டை எப்போதுமே மதத்தின் வழியில் பிரிக்கக்கூடாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிழித்து எறிந்துவிட்டு, அனைத்து மக்களும் ஒன்றாக வாழ வழிவகை செய்யும் அம்பேத்கர் அமைத்துக் கொடுத்த அரசியல் சாசனத்தைப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய அவர், “நான் காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாகவும், பா.ஜ.கவில் இருந்து விலகுவதாகவும் கூறுகிறார்கள். அப்படி எந்தத் திட்டமும் இல்லை. வாக்கு வங்கிக்காக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இதனால் தேசத்திற்கு எந்த பயனுமில்லை. இது என் உணர்வின் மூலம் வெளிவந்த கருத்து” எனத் தெரிவித்துள்ளார்.