மெர்சலான கேள்வி கேட்ட செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்த பாஜக தொண்டர்கள்
- IndiaGlitz, [Thursday,November 02 2017]
சென்னை கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரக்கடலில் ஆழ்த்தியுள்ள நிலையில் சிறுமியின் வீட்டிற்கு அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர். இந்த வகையில் சற்றுமுன்னர் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், சிறுமிகளின் பெற்றோர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்திரராஜன், 'தமிழகத்தில் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் அதிகரித்துவிட்டதாகவும், மழை பாதிப்பு நிவாரண நடவடிக்கைகளும் முறையாக நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அப்போது ஒரு நிருபர், 'மெர்சல்' படத்திற்கு காட்டிய அழுத்தமான எதிர்ப்பை ஏன் பாஜக லஞ்சம், ஊழல் விவகாரங்களுக்கு காட்டவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழிசை, இந்த கேள்வியே தவறு என்றும், சிறுமிகள் மரணத்திற்கு ஆறுதல் கூற வந்த இடத்தில் சினிமா படம் குறித்த கேள்விகள் வேண்டாம்' என்று கூறி பேட்டியை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார். தமிழிசை சென்ற பின்னர் அவரிடம் கேள்வி கேட்ட நிருபரை சூழ்ந்து கொண்ட பாஜகவினர், எப்படி இந்த கேள்வியை தங்கள் தலைவியிடம் கேட்கலாம் என்று கூறி மிரட்டல் விடுத்தனர். பின்னர் சக பத்திரிகையாளர்களும், காவல்துறையினர்களும் அந்த நிருபரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.