கொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய பாஜக பிரமுகர்!!!

  • IndiaGlitz, [Monday,April 06 2020]

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மக்களிடம் காணப்படுகின்ற அச்சத்தைப் போக்கும் விதமாகவும் மேலும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் ஏப்ரல் 5 ஆம் தேதி 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விளக்கேற்றுங்கள் எனப் பிரதமர் கூறியிருந்தார். பிரதமரின் இந்த அழைப்புக்கு பலத் தரப்புகளில் இருந்து, கடுமையான எதிர் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் மக்கள் இந்த அறிவிப்பை பெரும்பாலும் பின்பற்றி நடந்தனர்.

“மின் விளக்குகள் ஏற்றுங்கள” எனப் பிரதமர் கூறியதைத் தவறாக புரிந்து கொண்ட சில அதிக பிரசிங்கிகள் பட்டாசுகளை வெடித்து சில விபரீதங்களையும் அரங்கேற்றினர். சென்னையில் பட்டாசு வெடித்த விபத்தில் பெரும் தீ பரவியது. பின்னர் தீயணைப்பு துறையின் உதவியால் அணைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவின் ஜெய்பபூரில் இதே போன்ற தீவிபத்து நிகழ்ந்தது.

இந்த விபரீதங்களுக்கு மத்தியில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் துப்பாக்கியால் கொரோனாவை விரட்டியடித்த  நிகழ்ச்சிதான் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்திரபிரதேசத்தில் பல்ராம்பூர் தொகுதியின் தலைவர் மஞ்சித் திவாரி பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அகல் விளக்கை ஏற்றியுள்ளார். பின்னர் அதே கையில் கைத் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். பின்னணி இசையாக go corona go என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கோசம் எழுப்ப, மஞ்சித் திவாரி கொரோனாவை அழித்த பெருமிதத்தில் திளைத்து இருக்கிறார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பலரது விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது