உ.பியின் அடுத்த முதல்வர் யார்? ஆட்சிமன்ற கூட்டத்தில் மோடி-அமித்ஷா ஆலோசனை
- IndiaGlitz, [Saturday,March 11 2017]
சமீபத்தில் நடைபெற்று முடிந்த உத்தரபிரதேச மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே மாநிலம் முழுவதும் மோடி அலை காரணமாக பாரதிய ஜனதா கட்சி அமோக முன்னிலை பெற்று வந்தது. சற்று முன் உபியில் பாஜக 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே ஆட்சியை பிடித்துவிடும் நிலையில் அதற்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. எனவே 15 ஆண்டுகளுக்கு பின்னர் உபியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கின்றது. இளைஞர்கள் கூட்டணி என்று வர்ணிக்கப்பட்ட ராகுல்காந்தி+அகிலேஷ் யாதவ் கூட்டணி 72 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருப்பதால் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் உபியில் முதல்வரை தேர்வு செய்வதற்காக ஆட்சிமன்ற குழு இன்று பிற்பகல் கூடவிருப்பதாகவும், இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே உபி மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது இன்னும் ஒருசில மணிநேரங்களில் தெரிந்துவிடும்