நான் கந்துவட்டி கேட்டேனா? சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,September 15 2021]
பாஜகவில் சமீபத்தில் இணைந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஜெயலட்சுமி மீது கந்துவட்டி புகார் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த கீதா என்பவர் நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பாஜக ஆதரவு நடிகை ஜெயலட்சுமி மீது புகார் அளித்தார். ஜெயலட்சுமி தங்களுடைய மகளிர் குழுவிற்கு குறைந்த வட்டியில் பணம் கொடுத்ததாகவும், தாங்களும் மாதம் மாதம் அந்த பணத்தை சிறிது சிறிதாக செலுத்தியதாகவும், ஆனால் தற்போது நாங்கள் கொடுத்த பணம் எல்லாம் வட்டி மட்டுமே என்றும், அசலை தர வேண்டும் என்று கூறுவதாகவும், இல்லாவிட்டால் எங்களை கூண்டோடு அழித்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் தன்னுடைய புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு குறித்து காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் நடிகை ஜெயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தன் மீது புகார் கொடுத்த கீதா மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கீதா என்பவர் தனக்கு 2019ஆம் ஆண்டு அறிமுகமானதாகவும் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாததால் தனக்கும் தன்னுடைய குழுவில் உள்ளவர்களும் வறுமையில் வாடுவதாகவும், குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறினார்.
அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த குழுவுக்கு 17.50 லட்ச ரூபாய் கடனாக கொடுத்தேன். இந்த பணத்தை 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்தால் வட்டி தேவையில்லை என்று கூறினேன். ஆனால் நான் கொடுத்த பணத்தை கீதா குழுவில் உள்ள பெண்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இப்போது பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
இரு தரப்பிலிருந்தும் மனுவை பெற்றுள்ள காவல்துறையினர் உண்மை என்ன என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.