சித்தார்த்தை மிரட்டிய பாஜக....! அவரை ட்ரெண்டாக்கி ஆதரவு தரும் நெட்டிசன்கள்...!
- IndiaGlitz, [Thursday,April 29 2021]
நடிகர் சித்தார்த்தை பாஜகவினர் மிரட்டியதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
கொரோனாவின் 2- ஆம் கட்ட அலை மிக வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்தியாவில் தொற்றின் தினசரி பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாதது, ரெம்டெசிமர் மருந்து தட்டுப்பாடு, தடுப்பூசி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் அதிகமாக நடந்து வருகிறது. அதிலும் முக்கியமாக அதிகம் மக்கள் தொகை உள்ள மாநிலமான உத்திரப்பிரதேசத்தில், கொரோனாவின் தாக்கம் தீவிரமாகவே உள்ளது. ஆனால் அம்மாநில அரசு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்பவர்கள் குறித்து சரியான தகவல்களை வெளியிடுவதில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உபி-யில் இருக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது, தவறான செய்திகளை பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து மக்களுக்கு ஆதரவு தரும் வகையில், நடிகர் சித்தார்த் உபி முதல்வர் குறித்தும், கொரோனா தடுப்பூசி குறித்தும் டுவிட்டரில் விமர்சனம் செய்திருந்தார்.
இதனால் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சித்தார்த் மொபைல் எண்-ஐ பாஜக-வை சார்ந்த நபர்கள் முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சித்தார்த் கூறியிருப்பதாவது,
என்னுடைய மொபைல் எண்ணை பாஜக-வை சார்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனால் கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும், என் குடும்பத்திற்கும் 500-க்கும் அதிகமான கொலைமிரட்டல் மற்றும் வன்புணர்வு கால்கள் வந்த வண்ணம் உள்ளது. அவர்கள் பேசிய போன் ரெக்கார்டுகளை காவல் துறையினரிடத்தில் ஒப்படைத்து உள்ளேன், என்னால் பேசாமல் இருக்கமுடியாது, முடிந்தவரை முயற்சிப்பேன் என பதிவிட்டு இருந்தார்.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும், சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக #IStandWithSiddharth என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு,இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.